சென்னை, பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 19 வயதுடைய பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர், சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் தடகள பயிற்சியாளர் நாகராஜன், 2013 முதல் 2019 வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் பயிற்சி அளித்து வந்தபோது, தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த தன்னை ஒத்துழைத்தால்தான் போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பேன் என்று மிரட்டியதாகவும் புகார் கூறியிருந்தார். மேலும், தன்னைப் போல பயிற்சிக்கு வந்த பல பெண்களிடம் அவர் இதுபோன்று பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் புகாரில் அந்த பெண் கூறியிருந்தார்.


அந்த பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, 59 வயதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை போலீசார் கடந்த மாதம் 28-ந் தேதி கைது செய்தனர். அவர் ஜூன் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார்.இதுதொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை, பூக்கடை போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.




அவர்களின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள நாகராஜனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் மாணவி அளித்த புகார் குறித்தும், அவரிடம் பயிற்சி பெற்றவர்களிடம் அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


கடந்த மாத இறுதியில் சென்னை, கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை அளிக்கும் விதமாக குறுஞ்செய்திகள் அனுப்பியதும், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் வெளிவந்ததால், அந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டதைத்த் தொடர்ந்து பல இடங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியது. சென்னையில் மட்டும் மூன்று தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை : தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு