உலகமே ஒரு கிராமம் போல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுருங்கிவிட்ட நிலையில் சந்தையில் குவியும் பொருட்கள் ஏராளம். ஆனால் அதை வாங்க எல்லா மக்களிடமும் தாராளமாக பணம் இருக்கிறதா என்றால் இல்லை. இந்த ஏற்றத்தாழ்வு திருட்டு, கொள்ளை, இதோ இதுபோன்ற குறுக்கு வழி சம்பாத்தியங்களுக்கு தூண்டுகிறது. இந்தூரில் நடந்துள்ள குற்றம் உச்சபட்ச அதிர்ச்சி தரும் வகையறா.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது இந்தூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சைனா பீவி அண்மையில் ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார். அவர் வறுமையில் வாட, அவருக்கு நெருக்கமான சில பெண்கள் அந்தக் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு தத்துக் கொடுத்தால் லட்சக் கணக்கில் பணம் பெறலாம் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணும் இதற்கு சம்மதித்துள்ளார். குழந்தையின் தாய் உள்பட ஐந்து பெண்கள் சேர்ந்து இந்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் குழந்தையை விற்றுள்ளனர்.


லீனா சிங் என்ற பெண் தான் குழந்தையைப் பெற்றுள்ளார். இதற்காக ரூ.5.5 லட்சம் பணமும் பெற்றுள்ளனர். குழந்தையை விற்ற பணத்தை வைத்து அந்தப் பெண் எல்இடி டிவி, குளிர்சாதனப் பெட்டி, ஏர் கூலர், வாஷிங் மெஷின் மற்றும் ஒரு ஸ்கூட்டர் என பல பொருட்களை வாங்கியுள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.






காவல்துறை விளக்கம்:


இந்த சம்பவம் குறித்து ஹிரா நகர் காவல்துறை சிறப்பு அதிகாரி சதீஷ் படேல் கூறுகையில், சைனா பீவி கர்ப்பமடைந்த போதே அவரது கணவர் அந்தர் சிங் அந்தக் குழந்தையை கலைத்துவிடுமாறு சொல்லியுள்ளார். ஆனால் கருக்கலைப்பு செய்ய இயலாத அளவுக்கு கரு வளர்ந்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி அவர் கருவை சுமந்துவந்தார். அப்போது தான் லீனா சிங் என்ற பெண்ணுக்கு குழந்தை தேவைப்பட்டதை அறிந்தார். இதனால் அவர் ஒரு சதித்திட்டம் தீட்டி குழந்தை பிறந்தவுடன் விற்பதாகக் கூறினார். அதன்படி தான் குழந்தை பிறந்த 15வது நாளே அதை விற்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எங்களுக்கு இப்போதுதான் புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி சைனா பீவியை கைது செய்துள்ளோம். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்றார்.