நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி (73). இவருக்கு கால்வீக்கம் ஏற்பட்டதையடுத்து அவரின் மகன் மைதீன் பிச்சை என்பவர் பாளையங்கோட்டையில் உள்ள சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் தனியார் மருத்துவமனையில் அக்பர் அலியை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை நோய் இருப்பதால் காலில் ஒரு விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர். பின்னர் அதற்காக இரத்த பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். அப்போது அக்பர் அலிக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அக்பர் அலி மற்றும் அவரது மகன் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவசர அவசரமாக அக்பர் அலியை டிஸ்சார்ஜ் செய்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது அம்மருத்துவமனை நிர்வாகம்.



தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அக்பர் அலிக்கு அங்கு மீண்டும் இரத்த பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர்.  அப்போது அக்பர் அலிக்கு எச்ஐவி தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் குழப்பத்துடனும் மன வேதனையுடனும் இருந்த அக்பர் அலி மற்றும் அவரது மகன் ஆகியோர் இல்லாத நோயை இருப்பதாக கூறி தவறான மருத்துவ அறிக்கை வழங்கிய தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து மனு அளித்தனர்.




இதுகுறித்து உறவினர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கால் வலி அதிகம் இருப்பதால் இந்த மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் இரத்த பரிசோதனை செய்துவிட்டு எச்ஐவி  இருப்பதால் இங்கு சிகிச்சை கொடுக்க முடியாது என  இரவோடு இரவாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்பர் அலியின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தற்போது தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். மருமகள் 7 ஆண்டுக்கு பின் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் பதறி போய் விட்டனர். அனைவரின் மன நிலையும் பாதிக்கப்பட்டு விட்டது. அரசு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையில் எச்ஐவி இல்லை என தெரிவித்து உள்ளனர். இதனால் குடும்பமே மன வேதனையில் உள்ளது.


சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் இல்லாத நோயை இருப்பதாக கூறி தவறான மருத்துவ அறிக்கை அளித்துள்ளனர்.   எச்ஐவி போன்ற மிகக் கொடிய நோய் இருப்பதாக தவறாக கூறியதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகிறார். எனவே சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண