Rahul Gandhi: ஹரியானாவில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண், ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூட்கேசில் பெண்ணின் சடலம்:
ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஹிமானி நர்வால் (22), என்ற பெண்ணின் மரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
சம்ப்லா பேருந்து நிலையம் அருகே கிடந்த சூட்கேஸைக் கண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூட்கேஸுக்குள் இருந்த நர்வாலின் உடலைக் கைப்பற்றினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் துப்பட்டா சுற்றியிருந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் கைகளில் மெஹந்தி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ரோஹ்தக்கின் விஜய் நகர் பகுதியைச் சேர்ந்த நர்வால், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ரோஹ்தக்கின் பிஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காங்கிரஸ் கட்சி கண்டனம்:
முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் கட்சி எம்எல்ஏ பிபி பத்ராவுடன் இருக்கும் பல புகைப்படங்களை நர்வால் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பத்ரா, இந்த விஷயத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார், மேலும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நர்வால் பங்கேற்பார் என்றும் கூறினார்.
நர்வாலின் "காட்டுமிராண்டித்தனமான கொலை" செய்தி "அதிர்ச்சியளிப்பதாக" கூறிய ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். "ரோஹ்தக்கில் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மறைந்த ஆன்மாவுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன், மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையின் மீது ஒரு கறை” என்றும் தனது ட்வீட்டில் தெரிவித்து இருந்தார்.
போலீசார் விளக்கம்:
சம்ப்லா காவல் நிலைய பொறுப்பாளர் விஜேந்திர சிங், தானும் அவரது குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு இந்த வழக்கு குறித்து விசாரணை தொடங்கியதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.