சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி புதுத்தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவரது மனைவி செல்வி. இவரது மகன் கிரி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இரவு கிரி திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவன் உடலை மணினுர் சிவசக்திநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.



தோண்டி எடுக்கப்பட்ட உடல்:


இந்த நிலையில் போதை ஊசி போட்டுக் கொண்டதால் மாணவன் உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் உதவி ஆணையாளர் அசோகன், காவல் ஆய்வாளர் சந்திரகலா, கொண்டலாம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவனின் பெற்றோர் மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை மாணிக்கம் புகார் தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மாணவரின் உடலை அடக்கம் செய்த சுடுகாட்டுக்குச் சென்று உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டில் பரிசோதனை மேற்கொண்டனர்.



போதை ஊசியா? இயற்கை மரணமா?


இது குறித்து காவல்துறை அதிகாரி கூறும்போது, மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா அல்லது நோயினால் இறந்தாரா என்பது குறித்து தெரியவரும் எனவும் மாணவனுக்கு எப்படி போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாணவன் கிரி மீது கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தார்.


சேலம் மாநகரில் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிலநாயக்கன்பட்டி பகுதி முழுவதும் போதை மாத்திரை ஊசி உள்ளிட்டவைகள் மருந்து கடைகளில் அதிக அளவில் விற்கப்படுகிறது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன் இறப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.