இந்தியில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் சல்மான்கான் ஆடிய பாடல் தென்னிந்திய ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 


கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வீரம் படம் வெளியாகியிருந்தது. சிவா இயக்கிய இப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பாலா, விதார்த், சந்தானம், நாசர், மயில்சாமி, தம்பி ராமையா, அப்புக்குட்டி, அபிநயா, வித்யுலேகா ராமன் என பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் அஜித் - சிவா கூட்டணியில் மெஹா ஹிட் அடித்தது. காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்து ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தது. 


இந்த படம் அப்போது தெலுங்கில் வீருடோக்கடே என்ற பெயரிலும், இந்தியில் வீரம் தி பெர்மன் என்ற பெயரிலும்  டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனிடையே வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்னும் பெயரில் வெளியாகி நல்ல வரவேறைப் பெற்றது. தற்போது வீரம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சல்மான் கான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 


ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க, சித்தார்த் நிகம், க்ரீத்தி சனோன், ஜெகபதி பாபு, மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை ஃபர்ஹத் சம்ஜி இயக்குகிறார். மேலும்  ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கிடையில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் என்னும் பெயரிடப்பட்ட இப்படத்தில் இருந்து சமீபத்தில் எண்டம்மா என்னும் பாடல் வெளியானது. 


இதில் சல்மான் கானுடன், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராம் சரண் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க வேட்டி சட்டையில் சல்மான் கான் இப்பாடலுக்கு ஆடியிருந்தார். வட இந்தியா கலாச்சாரத்தில் வேட்டி  என்பது அரிதான ஒன்றாக உள்ள நிலையில், சல்மான் கான் வேட்டி கட்டி ஆடிய பாடல் முதலில் பாராட்டைப் பெற்றது. ஆனால் போக போக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆடிய சல்மான் கானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் சிவராம்கிருஷ்ணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


அவர் தனது ட்விட்டர் பதிவில், “இது மிகவும் கேலிக்குரியது மற்றும் நமது தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது" என கடுமையாக விமர்சித்துள்ளார். "சல்மான் கான் அணிந்திருப்பது லுங்கி அல்ல..  ஒரு கலாச்சார உடை அருவருப்பாக காட்டப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்