கோவை கணபதி பகுதியில் உள்ள தாரணி நகர் 8 ஆவது வீதியை சேர்ந்தவர் கங்காதரன் (34). இவர், காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டவர் எனவும், தற்பாலின சேர்க்கையாளர்கள் உள்ள மொபைல் ஆப் குழுவிலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவானந்தா காலனி காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத் (19) என்பவர், கங்காதரனை செல்போனில் தொடர்பு கொண்டு தற்பாலின சேர்க்கைக்காக வடகோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வரச் சொல்லி உள்ளார். இதன்படி கடந்த 27 ஆம் அன்று கங்காதரனும் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு பிரசாத் உடன் கங்காதரன் நிர்வாணமாக தற்பாலின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு வந்த நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பிரசாத், நிஷாந்த், மாணிக்கம் ஆகிய மூவரும் இணைந்து கங்காதரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது கங்காதரன் பணம் இல்லை எனக் கூறியதால், அவரிடம் இருந்த அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மூவரும் தப்பி சென்று விட்டனர். பிரசாத் திட்டமிட்டு தன்னை வரவழைத்து வீடியோ எடுத்து மிரட்டி செல்போனை பறித்துச் சென்றது கங்காதரனுக்கு தெரிந்தது.
இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கங்காதரன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாத்தினை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். நிஷாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இளைஞரை தற்பாலின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி செல்போனை பறித்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்