தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும் வெயிலின் தாக்கத்தை தனிப்பதற்காக இளநீர், மோர், நுங்கு போன்ற உடலின் வெப்பநிலையை தனிக்கும் பொருட்களை அதிக அளவில் உண்டுவருகிறார்கள்.

 

குறிப்பாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  இதனால் கடுமையான வறட்சியைத் தாங்குவதற்கும், வெயிலின் சூட்டைத் தணிக்கவும் விரும்புகிற பொதுமக்கள் ஐஸ்கிரீம், குளிர் பானங்களோடு, இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, மோர் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிட்டும் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவுக்காவது சமாளிப்பார்கள்.

 

இந்நிலையில், பொதுமக்கள் பெரிதும் விரும்பக்கூடிய ரசாயன கலப்படமற்ற இயற்கையான உணவு பொருட்களுக்குதான் மவுசு கூடிவருகிறது. இதில் சீசன் ஏதுமின்றி ஆண்டுதோறும் பரவலாக இளநீர் விற்கப்படும் நிலையில், சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுவிட்டது. இளநீருக்கு இணையான நுங்கு , மக்களின் எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது.

 



 

இந்நிலையில்  பொதுமக்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் விதமாக நுங்கு விற்பனைக்காக களமிறக்கப்பட்டுள்ளன. தாகத்தை தணிக்கவும், சூட்டை தணிக்கவும் நுங்கு பயன்பட்டாலும், வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு போன்ற உடல் பாதிப்புகளுக்கு உடலில் பூசிக்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனைமரங்கள் பராமரிப்பின்றி குறைந்து விட்டபோதும், கட்டியாவயல், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்சமயம் நுங்கு வெட்டப்படுகிறது. நுங்கிற்கான முழுமையான சீசன், தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நுங்கின் விலை 10 ரூபாயும், 3 நுங்கு சுலைகள் 10 ரூபாய் என கிராமங்களிலும் சாலையோர கடைகளிலும் விற்கப்படுகிறது. அதனை ஆவலுடன் வரவேற்று பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

 



 

புதுக்கோட்டை முதல் விராலிமலை வரையுள்ள கட்டியாவயல், குருக்களையாப்பட்டி, ஆரீயூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, சத்திரம், செங்கப்பட்டி, காலாடிப்பட்டி, தாண்றீஸ்வரம், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, விராலிமலைவரை சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கூழ், நுங்கு போன்றவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வெயிலை சமாளிக்க இதுபோன்ற கடைகளில் வாகனங்களை நிறுத்தி வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். குறிப்பாக இளநீர், நுங்கு, மோர், ஜூஸ், போன்ற வெப்பத்தை தணிக்கும் பொருட்களின் விற்பனை திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகரித்து உள்ளது.