கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சில இளைஞர்கள் ’ஸ்வீட் ராஸ்கல்’ எனும் குழுவை ஆரம்பித்து குழுவாக இயங்கி வந்தனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களிலிருந்து ’எவரெஸ்ட் பாய்ஸ்’ எனும் புது குழு உதயமானது. இதனையடுத்து இரண்டு குழு இளைஞர்களும் சூலூர் பகுதியில் வழக்கமாக நடைபெறும் பொங்கல் விழாக்கள் மற்றும் இதர சமய விழாக்களின் போது அவ்வப்போது மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பொது மக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன. சூலூர் காவல் துறையினர் ஏற்கனவே இரு வேறு மோதல் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சுமார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்த ஒருவரை மற்றொரு குழுவினர் ஆயுதங்களுடன் துரத்திச் சென்று கடுமையாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழு மோதல் வழக்கில் தலைமறைவாக இருந்த சூலூர் மதியழகன் நகரை சேர்ந்தவருமான ராம்ராஜ் மகன் அபிஸ் (18) என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூர் பகுதியில் இருந்த அபிசை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.



அபிஸ் 12ஆம் வகுப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஊர் சுற்றி திரிந்து வந்ததாகவும், அவ்வப்போது கானா பாடல்களை பாடி அப்பகுதி இளைஞர்களை உசுப்பேற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் பாடும் பாடல்கள் குறிப்பிட்ட குழு இளைஞர்களிடையே பிரபலமாவதால் அடிக்கடி இளைஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அபிசின் செல்போனை காவல் துறையினர்வ் ஆய்வு செய்த போது, பல்வேறு கானா பாடல்களை பாடி பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. கையில் கத்தியை வைத்துக் கொண்டு கொலை செய்து விடுவதாகவும், கொலை செய்து விடுவேன் எனவும் பல்வேறு பாடல்கள் இருந்தன. 


”திட்டம் போட்டு பண்ணிடுவேன் பெரிய மர்டரை
நீ கைவைச்சிட்டு தாண்ட மாட்டாய் சூலூர் பார்டரை”
”கத்தி, கத்தி ஸ்டிலு கத்தி வைச்சிருக்கேன் இடுப்பை சுத்தி
போட்டிடுவேன் உன்னை குத்தி”
“ஜெயிலுக்கு போயிட்டு வந்த ரவுடி நானு” என மோதலை ஏற்படுத்தும் வகையில் கானா பாடல்களை தொடர்ந்து பாடி பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த அபிசிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் நிலையத்தில் தான் செய்தது தவறு என கானா பாடலை காவல் துறையினர் பாட சொல்லி செல்போனில் பதிவு செய்து வெளியிட்டனர். அதில்


”தப்பு மேல தப்பு
நான் பண்ணிட்டேன் பெரிய தப்பு
ஒரு கானா பாடலால 
நான் இங்க நிக்குறேன்
தப்ப நான் உணர்ந்திட்டேன்” என அபிஸ் பாடியுள்ளார்.



கானா பாடல் திறமையை வெளிப்படுத்தி மோதலை உருவாக்கும் வகையில் செயல்பட்ட அபிஸை காவல் துறையினர் கண்டித்து, அறிவுரை வழங்கியுள்ளனர். அபிஸ் கைதுக்கு முன்பும், பின்பும் பாடிய கானா பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.