கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்திய பாண்டி. 32 வயதான இவர், டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 12 ம் தேதியன்று இரவு நவ இந்தியா பகுதியில் இருந்து ஆவராம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடைக்கு அருகே தனது நண்பர்களுடன் சத்திய பாண்டி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் தலைகவசம் அணிந்தபடி, 2 மோட்டர் சைக்கிளில் வந்தனர். அந்த கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியை திடீரென அரிவாளால் வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத் துவங்கினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது. இதையடுத்து அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்திய பாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று அந்த வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். 


இதில் சத்திய பாண்டிக்கு தலை, கை, கால், உடல் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டி விழுந்தது. மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சத்திய பாண்டி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் சத்திய பாண்டியின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.




இந்த கொலை வழக்கு தொடர்பாக காஜா உசேன் (23), சஞ்சய் குமார் (23), ஆல்வின் (37), சல்பர் கான் (22) ஆகிய 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்ட சஞ்சய் ராஜாவை கோவை அழைத்து வந்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சஞ்ஜய்ராஜா கொலைக்கு பயன்படுத்திய கை துப்பாக்கியை எடுத்து தருவதாக காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


இதனடிப்படையில் பந்தய சாலை காவல் துறையினர் கரட்டுமேடு முருகர் கோயில் வடபுரம் உள்ள மலை சரிவிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்த ஆய்வாளர் கிருஷ்ண லீலாவை நோக்கி ஒரு குண்டு சுட்டதாகவும், நொடி பொழுதில் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் ஒரு குண்டு அவரை நோக்கி உன்னை கொள்ளாமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு கொலைவெறியுடன் சுட்டதாகவும், அப்போது உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சஞ்சய்ராஜாவின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் ஏற்பட்ட சஞ்சய் ராஜா துப்பாக்கியை கீழே போட்டுள்ளார். பின்னர் சஞ்சய் ராஜா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி துப்பாக்கி சூடு நடத்தியதால், தங்களை தற்காத்துக் கொள்ள வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.