கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான 156 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றை விற்பனை செய்பவர்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று சூலூர் அருகேயுள்ள நீலாம்பூர் பகுதியில் கோவை - அவினாசி சாலையில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு இளைஞரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த அந்நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த திலீப் குமார் (38) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து திலீப் குமாரிடம் இருந்து 10 இலட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 156 கிலோ எடை கொண்ட 27,040 கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் சென்று தனிப்படை காவல் துறையினரை பாராட்டி பணம் வெகுமதி வழங்கினார். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்