சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது தான் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகளை பிரபல பாலிவுட் நடிகர் ரவி கிஷன் விவரித்துள்ளார். 


சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது நம் அனைவரின் கனவாக இருக்கும். நம்மை சுற்றி வாய்ப்பு தேடி அலைபவர்கள் படும் கஷ்டங்களை கண்டால் பலருக்கும் அந்த ஆசை காணாமல் போயிருக்கும். அதேசமயம் என்றாவது ஒருநாள் தனக்கான வாய்ப்பு அமைந்து தனது பெயரை, அல்லது முகத்தை பெரிய திரையில் காணும் போது அந்த மகிழ்ச்சி சொல்ல முடியாதது. இப்படியான இன்பமும், துன்பமும் நிறைந்த சினிமா தொழிலை சிலர் தங்கள் சுயலாபத்துக்காக தவறாக பயன்படுத்துகின்றனர். 


குறிப்பாக புதிதாக வாய்ப்பு தேடி அலைபவர்கள் தொடங்கி பெரிய பெரிய பிரபலங்கள் வரை சினிமாவில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அண்மை காலமாக மீ டூ இயக்கத்தில் பல திரைப்பிரபலங்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக பேசப்பட்டு வருகின்றன. முக்கிய பிரபலங்கள் எல்லாம் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் சினிமாத்துறையில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் துன்பப்படுகிறார்கள் என்பதை பிரபல பாலிவுட் நடிகர் ரவி கிஷன் விவரித்துள்ளார். 


இந்தி மற்றும் போஜ்புரி திரைப்படத் துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ரவி கிஷன் 1992 ஆம் ஆண்டு பீதாம்பர் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான அவர், இந்தி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து தேரே நாம், கீமத், ஃபிர்,ஹேரா பெரி, தனு வெட்ஸ் மனு  போன்ற பல பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த அவர் கடைசியாக நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான காக்கி: பீகார் அத்தியாயம் தொடரில் நடித்திருந்தார்.


இவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று தற்போது எம்.பி.யாக உள்ளார். இவர் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் நடைபெற்ற தவறான அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.சமீபத்திய நேர்காணல் ஒன்றில், இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பான கேள்விக்கு அளித்த பதிலில், “ஆமாம். அந்த சம்பவம் உண்மைதான். இது தொழில்துறையில் வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால் நான் எப்படியோ தப்பித்துவிட்டேன். எனது வேலையை நேர்மையுடன் அணுக வேண்டும் என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார், நான் குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை. நான் திறமைசாலி என்று எனக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார்.


யார் அவர் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவளுடைய பெயரை என்னால் சொல்ல முடியாது, ஏனென்றால் அவள் இப்போது ஒரு பெரிய ஹீரோயின் ஆகிவிட்டார். இரவில் ஒரு கப் காபிக்கு வா என்று அவர் சொன்னார். ஆனால் அதற்கான உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்ட பின் நான் விலகி விட்டேன்” என ரவி கிஷன் கூறியுள்ளார்.