கோவை லங்கா கார்னர் பகுதியில் துப்பாக்கியுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை உக்கடம் காவல் துறையினர் லங்கா கார்னர் இரயில்வே பாலம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி திரிந்தனர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் வைத்திருந்த பையினை காவல் துறையினர் சோதனை செய்தனர். 


அதில் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜித்குமார் (28), கடலூர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சந்திர சேகர் (37) மற்றும் கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கெளதம் (28) ஆகியோர் என்பதும், வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் காவல் துறையினரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.




இதேபோல கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் சுவரோட்டிகள் ஓட்டி வருவதை தடுக்கும் வகையில், வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றனர். அதில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களை விவரிக்கும் வகையில் சுவரோவியங்கள் வரையப்பட்டு இருந்தன. இந்நிலையில் அந்த சுவரோவியங்களில் விஸ்வ ஜன முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கருப்பு நிற பெயிண்டை ஊற்றி அழித்துள்ளார். 


விஸ்வகர்மா மக்களின் ஐந்தொழில் ஒன்றான பொற்கொல்லரை இழிவு படுத்தி தவறாக சித்தரித்து கோவலன் மரணத்திற்கும் திருடியதற்கு பொற்கொல்லர்கள் தான் காரணம் என்று ஓவியங்கள் தவறாக வரைந்து உள்ளார்கள் என அவர் தெரிவித்தார். கோவை மாநகர மைய பகுதியில் மட்டும் 4 லட்சம் தங்க நகை தொழில் செய்யும் பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள் எனவும், திராவிட முன்னேற்ற கழகம் விஸ்வகர்மா மக்கள் முன்னேற்றத்திற்கு என்று பல நல்ல திட்டங்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் பெயரைக் கெடுக்கும் விதமாக கோவை மாவட்டம் நிர்வாகம் செயல்படுகிறது என அவர் கூறினார். இந்நிலையில் நகரத்தின் அழகைக் கெடுத்து ஆக்கப்பூர்வமான உருவப்படங்களில் கருப்பு மை ஊற்றியதாக வேல்முருகன் மீது காட்டூர் காவல் துறையினர் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வேல் முருகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண