கோவை மாவட்டம் சூலூரை அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர்ரக வெளிநாட்டு போதைப் பொருள்கள்  மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை கொண்ட போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களது  உடைமைகளை சோதனை செய்த போது, அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்தது. 


இதுகுறித்து காவல் துறையினர் இளைஞர்களிடம் கேட்ட போது, அவர்கள் பதில் அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் இளைஞர்கள் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த நந்தகிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது அரஷத் என்பவருடன் சேர்ந்து வெளிநாடுகளில் இருந்து மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களிடமிருந்து வாங்கி, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 


பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நவஇந்தியா அருகே பதுங்கி இருந்த முகமது அஷ்ரத்தையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 60 கிராம் மெத்தபெட்டமைன்  பறிமுதல் செய்த காவல் துறையினர், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனின்  மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  இந்தாண்டில் கோவை மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 304 நபர்கள் மீது 233 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 462.851 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 16 நபர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 109 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதேபோல போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல் துறைக்கு கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண