கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவரது மனைவி தங்கமணி. இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில், இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கமணி இதே பகுதியில் வட்டிக்கு பணம் விட்டு வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணி சொந்த வேலையாக வெளியே சென்றுள்ளார். அப்போது தங்கமணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். சுப்பிரமணி பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி சடலமாக கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி சத்தம் போட்டு உள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அப்போது கொலையாளிகள் வீட்டில் இருந்து பணம் நகை என எதையும் திருடிச் செல்லவில்லை என்பதும், தடயத்தை மறைக்க உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்