கோவையில் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு விமானப்படைக்கு மாற்றம்

’’இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவு’’

Continues below advertisement

கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப் படை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், ஓய்வுக்காக தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, ​​இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு,  கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும், விமானப் படை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அமித்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர்.

Continues below advertisement


இதையடுத்து நீதிமன்றத்தில் அமித்தேஷ் ஹர்முக் ஆஜர்படுத்தப்பட்ட போது, விமானப் படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமித்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறையினர் பதில் அபிடவிட் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், நீதிமன்ற காவலில் லெப்டினல் அமித்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைக்கப்பட்டார். கடந்த 27 ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதனிடையே அமித்தேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதேபோல அமித்தேஷ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து அமித்தேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று அமித்தேஷ் ஹர்முக் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார். மேலும் விமானப்படை அதிகாரிகளிடம் லெப்டினல் அமித்தேஷை ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமித்தேஷ் தரப்பு வழக்கறிஞர் சுந்தரவடிவேல், “பெண் அதிகாரி பாலியல் வழக்கு விசாரணை காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், விமானப்படை அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்திய விமானப்படை சட்டம் 1950 படி இந்த வழக்கு விசாரணை இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும். பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கலாம். ஆனால் கைது செய்து சிறையில் அடைத்திருக்கக் கூடாது. விமானப்படை அதிகாரியை காவல் துறையினர் விசாரிக்க முடியாது” என அவர் தெரிவித்தார். இதையடுத்து லெப்டினேல் அமித்தேஷ் விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola