கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப் படை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், ஓய்வுக்காக தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். மேலும் விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, ​​இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு,  கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும், விமானப் படை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அமித்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர்.


இதையடுத்து நீதிமன்றத்தில் அமித்தேஷ் ஹர்முக் ஆஜர்படுத்தப்பட்ட போது, விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமித்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறையினர் பதில் அபிடவிட் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், நீதிமன்ற காவலில் லெப்டினல் அமித்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைக்கப்பட்டார். கடந்த 27 ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதனிடையே அமித்தேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதேபோல அமித்தேஷ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து அமிதேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் நீதிமன்ற காவல் முடியும் நிலையில், இன்று அமித்தேஷ் ஹர்முக் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமித்தேஷை கோவை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுமா அல்லது விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து விசாரணை நடைபெற உள்ளது. காவலில் எடுத்து எடுத்து விசாரிப்பது யார் என்பது குறித்து நீதிபதி முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.