கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் அருகே வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஜோசப் ஃபிராங்ளின் என்பவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் என்ற விசை படகில் வள்ளவிளை  கிராமத்தை சேர்ந்த  ஜோசப் ஃபிராங்க்ளின், ஏசுதாசன், ஜான், ஜெனிஸ்டன் உள்ளிட்ட 11 மீனவர்கள் மீன்பிடிக்க கிளம்பினர். 


தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஒன்பதாம் தேதி அரபிக் கடலில் மீன்பிடிக்க புறப்பட்ட அவர்கள், அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அந்த படகு கடந்த 23 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்ததை சக மீனவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில்,  அந்த வழியாக வந்த  கப்பல் மோதியதால் குமரி மீனவர்களின் படகு மூழ்கியதாகவும், இந்த சம்பவத்தில் 11 மீனவர்களும் கடலில் மூழ்கி மாயமானதாக சக மீனவர்கள் தரப்பில் தகவல் வெளியானது.




உடைந்த படகின் ஒரு பகுதியை பார்த்ததாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் இத்தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். மாயமான மீனவர்களின் நிலை தெரியாததால் அவர்களை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‛மாயமான மீனவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என கூறியிருந்தார். 




இது ஒருபுறமிருக்க கடலோர காவல் படை மற்றும் மீனவர்கள்  இணைந்து மாயமான மீனவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்ட 11 மீனவர்களும் அரபிக்கடலில் இன்று  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சேதமடைந்த படகும் மீட்கப்பட்ட நிலையில் மீனவர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து வருவதாக கடலோர காவல்படை தரப்பில் 11 பேரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கடும் சோகத்தில் இருந்த மீனவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.