இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3.23 லட்சமாக உள்ளது. மேலும் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தோரின் சதவிகிதம் 82.54 ஆக குறைந்துள்ளது. எனினும் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது இன்றைய தொற்று பாதிப்பு சற்று குறைவாக தான் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்தும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எவ்வாறு அதிகாரிகள் கையாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்க உள்ளனர் என்பது தொடர்பாக அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கூட்டத்தில் விவரித்தனர்.
மேலும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நிவாரண நிதி மூலம் தொடங்கப்படும் ஆக்சிஜன் மையங்களுக்கான பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு இறக்குமதி குறித்தும் பிரதமருக்கு அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். அத்துடன் தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இருந்த அளவைவிட அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நாட்டில் ஒரு நாளைக்கு 5700 மெட்ரிக் டன் ஆக இருந்தது. அது தற்போது ஏப்ரல் 25 ஒருநாளைக்கு 8922 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஒருநாளைக்கு ஆக்சிஜன் உற்பத்தி 9250 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.