ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் பெங்களூரு-டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணியில் ஏபிடிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் தனது மின்னல் வேக அதிரடி ஆட்டத்தின் மூலம் டெல்லி பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
ஏபிடிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி வலுவான ஸ்கோரை எட்டியது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஏபிடிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உதவியுடன் 42 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். ஏபிடியின் மின்னல் வேக ஆட்டத்திற்கு பிறகு அகமதாபாத் மைதானத்தில் புழுதிப் புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி அணியின் ஆட்டம் சற்று நேரம் தடைப்பட்டது.
இந்நிலையில் 1998ஆம் ஆண்டு ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் இதேபோன்று தடைப்பட்டது. அதை தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர். அதாவது 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஷார்ஜாவில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி மைக்கேல் பெவனின் சதத்தால் 50 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்தது.
அந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலிய பேட்டிங் முடிந்த உடன் பாலைவன புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் பேட்டிங் சற்று தாமதமானது. இதனால் இந்திய அணிக்கு 46 ஓவர்களில் 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. புயலுக்கு பிறகு களமிறங்கிய இந்திய அணியில் மாஸ்ட்ர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். தொடக்கம் முதல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசி சச்சின் 143 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 43ஆவது ஓவரில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததால் இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. எனினும் புயலுக்கு பிறகு சச்சின் ஆட்டம் மற்றொரு புயல் போன்று அமைந்தது.
அந்தப் போட்டிக்கும் இன்று நடைபெற்று வரும் போட்டிக்கு புயல் மட்டும் தொடர்பு அல்ல. இன்றைய போட்டியில் ஏபி டிவில்லியர்ஸூம் 5 சிக்சர்கள் விளாசினார். சச்சினும் அந்தப் போட்டியில் 5 சிக்சர்கள் விளாசினார். ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் புயலுக்கு முன்பாக ஏபிடி புயல் ஆட்டம் ஆடினார். ஆனால் அந்தப் போட்டியில் புயலுக்கு பின்பு சச்சின் புயல் போல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டி நடைபெற்று முடிந்து 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு கிரிக்கெட் போட்டியில் புயல் ஒன்று வந்துள்ளது. இந்தப் போட்டியிலும் ஒரு அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது மிகவும் சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.