போலியான பிஐஎஸ் முத்திரை கொண்ட பொருட்களை சீனாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதாக புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து ரகசியத் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை:
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகம், சென்னை டாக்ஸ் புலனாய்வு பிரிவு, சுங்க மாளிகை ஆகியவற்றின் அதிகாரிகள் குழு, 10 பிப்ரவரி 2023 அன்று சென்னை ராயபுரத்தில் உள்ள கன்டெய்னர் சரக்கு நிலையம் ஓ-யார்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, பின்வரும் பொருட்கள் பிஐஎஸ் சட்டம் 2016 ஐ மீறுவதாக கண்டறியப்பட்டது.
1) 672 எல்இடி லைட்டிங் செயின்கள் போலி பிஐஎஸ் பதிவு முத்திரையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
2) 10000 பிளக்குகள் மற்றும் கேபிள்கள் அசெம்பிளி ஆகியவை பிஎஸ்ஐ தர முத்திரை (ISI மார்க்) கொண்டதாக இல்லை. பிளக்குகள் மற்றும் கேபிள்கள் பிஐஎஸ்-ன் கட்டாயச் தர சான்றிதழின் கீழ் உள்ளன.
இந்தப் பொருட்கள் இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றைப் பாதுகாப்பாக வைக்க சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகள் வரை சிறை:
இந்த போலி பிஐஎஸ் முத்திரை குற்றத்திற்கு, முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம், 2016 இன் பிரிவு 29-ன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000/- த்திற்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும். அல்லது பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.
புகார் தெரிவிக்கலாம்:
எனவே, எவரேனும் ஐஎஸ்ஐ போலி முத்திரையைப் பயன்படுத்துவது தெரிந்தால் , பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.
BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சந்தைப்படுத்துதல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் பிரிவு துணை இயக்குநர் ஹெச் அஜய் கண்ணா தெரிவித்துள்ளார்.
Also Read: Crime: திருவண்ணாமலையில் அடுத்தடுத்து கொள்ளை.. ஏ.டி.எம் மையங்களில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு!