சென்னையில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதைக்காக விற்பனை செய்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதனை நேர்த்தியாகக் கையாள்வதில் இன்றைய இளைஞர்கள் தேர்ச்சிப் பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் தொழில்நுட்பத்தினை நல்ல முறையில் பயன்படுத்தக்கூடியவர்களுக்கு மத்தியில் தேவையில்லாமல் கலாச்சார சீரழிவுக்கும் பலர் உபயோகித்து வரும் அவலமும் அரங்கேறுகிறது. அப்படித்தான் சென்னையில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா, புகையிலை போன்ற சில போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தப்பொழுதும் அதனை தெரியாமல் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் தான், இன்றைய வளரும் தலைமுறையினர் சிகரெட், புகையிலை, கஞ்சா போன்றவற்றையெல்லாம் தாண்டி தற்பொழுது வலி நிவாரணி மாத்திரைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அதனை தூளாக்கி நீரில் கலந்து ஊசி மூலம் தாங்களே செலுத்திக்கொள்கின்றனர்.
இந்த மாத்திரையினைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை போதை இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அதிக விலைக்கொடுத்து மற்ற போதைப்பொருள்கள் வாங்க முடியாத நிலையில் தான், அரசால் குறைந்த விலைக்கு விற்பனையாகும் கேன்சர் நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலமாக இந்த மாத்திரைகளை 300 முதல் 500 ரூபாய் வரை வாங்கி, அதை 1000 முதல் 2000 ரூபாய் வரை பல இளைஞர்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக்குறி வைத்து இந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் 18வயதிற்கு உட்பட்ட போதை மருந்து ஊசியினை செலுத்திக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இந்த வழக்கில் பழைய வண்ணாரப்பேட்டையினைச்சேர்ந்த சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த முகமது அசாரூதின் (30), விக்னேஷ் (25), டியோ கார்த்திக் (25), கரம் (எ) முகமது ஜமீல் (23), ரங்கா (எ) ரங்கநாதன் (29), தினேஷ் குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 260 நைட்ரோவிட் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கேரளாவை சேர்ந்த ரிதீஸ் ராஜன் (34) உள்ளிட்ட 4 பேர், வட மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரும் சென்னை முழுவதும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10,500 நைட்ரோவிட் மாத்திரைகள் மற்றும் 1,400 டைடோல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதை மாத்திரை விவகாரத்தில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நெட்வொர்க் பெரிய அளவில் செயல்பட்டு வருவதால் இதில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்து, போதை மாத்திரை புழக்கத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என டீலராக செயல்பட்டு பாபு என்பவர் மூலமாக இந்த போதை மாத்திரை விற்பனை நடைபெற்றுள்ளது. அவ்வப்போது, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் போதை மாத்திரைகள் வாங்கி வந்து, சென்னையில் விற்றுள்ளனர். குறிப்பாக, வடமாநிலங்களில் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படும் இந்த போதை மாத்திரைகள் சென்னையில் 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போதை மாத்திரை விற்பனைகள் அனைத்தும் இளைஞர்களைக்குறி வைத்து நடப்பதால் பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் அதனை மருத்துவரிடமோஅல்லது மன ஆலோசகரிடமோ கலந்தாலோசிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.. இதோடு காவல்துறையினரும் சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைக்கின்றனர்.