கொரோனாவின் வருகைக்கு பின்னர் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. முகக்கவசம் ஒரு உடையாகவே மாறிவிட்டது. பேருந்தோ, ரயிலோ ஒருவரோடு நெருங்கி நிற்பதே ஒரு அச்சத்தை தருகிறது. பள்ளிக்கூடங்கள் செல்போனுக்குள் வந்துவிட்டன. திருவிழாக்கள் சுருங்கிவிட்டன. இந்த மாற்றத்துக்கு கைகொடுத்து தன்னை பெருக்கிக் கொண்டு வருகிறது டிஜிட்டல் உலகம். கூகுள் மீட், ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ப்ரம் ஹோம், ஓடிடி என தொடர்கிறது அதன் வளர்ச்சி. அப்படியாக இப்போது பண்டிகைகளும் டிஜிட்டலை நோக்கி தள்ளப்படுகின்றன. கேரளாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான ஓணம் இந்த வருடம் டிஜிட்டலில் கொண்டாடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.




இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டால் அலை கோரத்தாண்டவம் அடங்கியுள்ளது. ஆனால் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 18ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் ஓணம் பண்டிகையை வழக்கமாக கொண்டாடுவது மேலும் சிக்கலை உண்டாக்கும் என்பதால் டிஜிட்டல் ஓணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது கேரள சுற்றுலாத்துறை. இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், ''கேரளாவில் சுற்றுலாத்துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை டிஜிட்டலில் கொண்டாடப்படும். 


இதற்காக கேரளாவின் பாரம்பரிய கலை, கலாசாரம், உணவு வகைகள், சுற்றுலாத்தலங்களின் வீடியோக்கள் அனைத்தும் காணொலில் வெளியிடப்படும். இந்த டிஜிட்டல் ஓணம் நிகழ்ச்சியை வரும் 14ம் தேதி முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். இந்த டிஜிட்டல் ஓணத்தில் ஒரு பகுதியாக, உலக மலர் கோலம் போட்டி நடத்தப்படும். இதில் பங்கேற்க நாளை முதல் பெயரை பதிவு செய்யலாம். இந்த போட்டியில் பங்கேற்கும் கேரள மக்கள் தாங்கள் உருவாக்கிய பூக்கோலத்தை சுற்றுலாத்துறையின் இணையதள பக்கத்தில் பதிவேற்றலாம் என்றார். 




கேரளாவில் தொடர்ந்து கொரோனா உச்சத்திலேயே இருக்கிறது. நேற்று 18607 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் கேரளாவில் 93 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு உயிரிழந்தனர்.இதுவரை கேரளாவில் 17,747 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா குறித்து பதிவிட்டிருந்த வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங்  " கொரோனா பரிசோதனை மற்றும் நோய்த் தொற்று கண்டறியப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறைவான  இறப்பு விகிதம் இருப்பதால்  பெருந்தொற்று அம்மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுவிழக்க செய்யவில்லை என்பதை உணர முடிகிறது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை’’ என்றார்.


பூவில் கூட காகிதம் இருக்கக்கூடாது என மலர்ந்த மலர்களை தூவி பூக்கோலம் போடும் கேரளாவில், ஓணத்தை டிஜிட்டலில் கொண்டாடும் சூழலை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.