போதை மாத்திரைகள் வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கிய இளைஞர் மாத்திரைகளை வாங்கி தராததால் அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரம் பகுதியில் நள்ளிரவில், மர்ம நபர்கள் சிலர் ராகுல் என்பவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராகுல் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து ராகுல் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராகுல் அங்கு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.                                                            


                                           


                                                                                                     கொலை செய்யப்பட்ட ராகுல் 


                                                


அதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ராகுல் அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரிடம் போதை மாத்திரைகள் வாங்கி தருவதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வாங்கியதாகவும், பணத்தை வாங்கிக்கொண்ட ராகுல் போதை மாத்திரைகள் வாங்கி தராமல் இழுத்தடித்ததாகவும் சொல்லப்பட்டது.


இந்த நிலையில் ஆத்திரமடைந்த கௌரிசங்கர் (25),சரவணன் வயது (20 ),ரகுமான் (20) ஆகிய மூன்று பேரும் போதையில் ஹரிநாராயணபுரம் பகுதி வழியாக வந்த ராகுலை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுலை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஆர்.கே நகர் காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.