நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ கோப்ரா’ படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் சீயான் விக்ரம். புதிய மன்னர்கள், மீரா, என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை போன்ற படங்களில் தனது நடிப்பைத் தொடங்கியிருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் தான் மிகப்பெரிய வெற்றி அவருக்கு கிடைத்தது. இதனையடுத்து தூள், காசி,சாமி , அந்நியன், ஐ, தெய்வதிருமகள், 10 எண்றதுக்குள்ள என சீயான் விக்ரம் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக விக்ரம் நடித்த படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில் தான், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் நடித்த மகான் படம் வெளியனது. காந்தியக்கொள்கையில் பிறந்த ஒருவரின் வாழ்வு கலாச்சார சீரழிவினால் பாதிக்கப்படுகிறது என்பதை மையக் கருவாக வைத்து சமீபத்தில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனைத்தொடர்ந்துதான் கோப்ரா படத்தில் கமிட் ஆனார். சுமார் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தில் இருந்து ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியான நிலையில், அதீரா அதீரா பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தில் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிகா, ஷாஜி சென் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதோடு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்திருக்கிறார். லலித் குமாரின் 7 ஸ்கீரின் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.