தமிழ்நாட்டில் தெருக்கு தெரு மரம் இருப்பதுபோல் சாமியார் நாளுக்கு நாள் முளைத்து கொண்டு இருக்கிறார்கள். நித்தியானந்தா, அண்ணபூரணி என நான் தான் அடுத்த கடவுள் என பலரையும் தங்களது பேச்சால் ஈர்த்து கவர்ந்து கொண்டனர்.
இவர்களுக்கென தனி நாடே உருவாகும் அளவிற்கு செல்வாக்கு உயர்ந்து கடவுளாகவே பார்க்கப்படுகிறார்கள். தனி பக்தர் பட்டாளம், தனி நாடு, நாணயம் என இவர்கள் காட்டில் மழைதான். என்னதான் இவர்கள் மீது ஒரு தரப்பினர் கொண்டாடி தீர்த்தாலும், மற்றொரு தரப்பினர் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துதான் வருகின்றனர்.
பலரும் இவர்கள் போன்றோர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கி வந்தாலும், இது போன்ற சாமியார்கள் இன்னும் சுதந்திர பறவையாக பறக்கின்றனர். இவர்களை பின்பற்றி இன்னும் பல பேர் உருவெடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரிதா, கோகிலா, ரதி, அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. நண்பர்களான இவர்கள் வீட்டிற்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் வட பழனியைச் சேர்ந்த கோயில் பூசாரி ஒருவர் பூரண பிரகாஷ் என்பவர் சென்று, 'வீட்டில் உள்ள நகைகளை சொர்ண அபிஷேகம் செய்து, 48 நாட்கள் பூஜை செய்தால், உங்களிடம் அதிகமாக தங்கம் சேரும்,' என கூறியுள்ளார்.
இதனை நம்பி சரிதா அரை சவரன் தங்கமும், சரஸ்வதி 2 சவரன் தங்கமும், கோகிலா 3.5 சவரன் தங்கமும், ரதி 1 சவரன் தங்கமும் என 7 சவரன் தங்க நகைகளை பூர்ண பிரகாஷிடம் கொடுத்துள்ளனர். பின்னர், 48 நாட்கள் கழித்து நகையை கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பி கேட்டபோது, ஏதாவது ஒரு காரணம் சொல்லி காலத்தை கடத்தி வந்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மேற்கண்ட 4 பேரும், நேற்று ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சொர்ண அபிஷேகம் செய்து நகைகளை திருப்பி தருவதாக கூறி எங்களது 4 பேரிடமும் நகை களை வாங்கி ஏமாற்றிய பூரண பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், பூரண பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்