சினிமா தயாரிப்பாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பாலியல் தொழில் புரோக்கர் மேல்மலையனூர் கோயிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.


போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி


கடந்த 3-9-2022 அன்று விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அதிர்ச்சி தகவல் சென்று சேர்ந்தது. விருகம்பாக்கம் நெற்குன்றம் சாலையில், பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட ஆண் சடலம், இருப்பதாக தொலைபேசியில் தகவல் பறந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை விருகம்பாக்கம் போலீசார், பிளாஸ்டிக் கவரில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினார். தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (69). இவர் சாம்ராட், ஒயிட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் தயாரித்துள்ளார். மேலும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்வது ரியல் எஸ்டேட் ஆகிய தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.


காட்டிக் கொடுத்த செல்போன் அழைப்பு


பாஸ்கரன் தொழில் போட்டி காரணமாக, அல்லது கொடுத்தல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணை துவங்கியது. செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை தொடங்கிய பொழுது, விருகம்பாக்கம் அரங்கநாதன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் உடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.


போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணேசன் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாக நட்பு இருந்து வந்துள்ளது. கணேசன் வீட்டிற்கு பாஸ்கர் வந்து செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. கணேசன் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும், நட்சத்திர ஓட்டல்களில் அரை எடுத்து இளம் பெண்கள் மற்றும் துணை நடிகைகளை ஏற்பாடு செய்து தரும் புரோக்கராக கணேசன் செயல்பட்டு வந்துள்ளார்.  


தேவைப்படும்போதெல்லாம், அந்தத் தேவையை பூர்த்தி செய்த கணேசன்


பாஸ்கரனுக்கு ஆசைப்படும்பொழுதெல்லாம் கணேசன், தேவைப்படும் பெண்களை அதே போன்று பாஸ்கர் விருப்பப்படும் துணை நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளார் கணேசன்.  சம்பவம் நடந்த அன்று புதியதாக இரண்டு பெண்கள் வந்திருப்பதாக கூறி பாஸ்கரனை வீட்டிற்கு அழைத்துள்ளார். எதிர்பார்த்த பெண்கள் இல்லாததால் பாஸ்கரன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. கணேசனை பாஸ்கர் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளார். அதே போன்று இருவருக்கு இடையே அப்பொழுது நடந்த சண்டையில் கணேசன் பாஸ்கரை , தாக்கியதில் மயங்கி விழுந்து பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து சந்தேகம் வராமல் இருக்க உடலை கூவம் கரையில் வீசி விட்டு சென்றதும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர்


தலைமறைவான கணேசன்


இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கணேசன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர், கணேசன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து போலீசார் தலைமறைவான கணேசனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு வகையில் போலீசார் கணேசனை கைது செய்ய முயற்சி செய்தும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் தெரியாமல் போலீசார் தேடி வந்தனர்.


குறி சொல்லும் பூசாரி போல்


போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வேல்மலையனூர் கோயிலில அவ்வப்பொழுது கணேசன் சுற்றி வருவது தெரிய வந்தது. அங்கு இருக்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த கணேசன் போலீசிடம் சிக்காமல் இருக்கவும் சந்தேகம் வராமலும் இருக்கவும், குறி சொல்லும் பூசாரி போல் நடித்து வந்துள்ளார். இதனை அடுத்து தனிப்படி போலீசார் மேல்மலையனூர் சென்ற பொழுது, தினமும் கணேசன் தூங்கும் இடத்தில் காத்திருந்துள்ளனர். அங்கு வந்த கணேசனிடம் போலீசார் நைசாக பேசி, அருள்வாக்கு கூறுமாறு கேட்டுள்ளனர். வந்தது போலீஸ் என தெரியாமல் அருள்வாக்கு சொல்வதைப் போல் நடித்தார், இதனை அடுத்து போலீசார் லாபகமாக கணேசனை கைது செய்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.