நீட் தேர்வில் ஊழல், முறைகேடு நடந்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும் ஜூன் 21ஆம் தேதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் நீட் தேர்வு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தேர்வுக்கு முன்னதாகவே வட மாநிலங்களில் வினாத்தாள் வெளியிடப்பட்டதாகப் புகார் எழுந்தது. தேர்வின்போது ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாகவும் பிஹாரில் சிலர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் நீட் தேர்வு முடிவுகளின்போது சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதேபோல ஒரே தேர்வறையைச் சேர்ந்த 6 மாணவர்கள் தேசிய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றனர். அதே அறையில் தேர்வெழுதிய 2 பேர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று இருந்தனர்.


இவை உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.


கருணை மதிப்பெண்கள் விவகாரம்


இதற்கிடையே கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இந்த மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆனாலும் அடுத்தடுத்து, முறைகேடு நிகழ்வுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. அண்மையில்கூட பிஹாரில் சிலரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


அமைதியாக வேடிக்கை பார்க்கும் அரசு


இந்த நிலையில், ஆளும் என்டிஏ அரசு இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செயல்பாடு இன்றி இருப்பதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எதிர்க் கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. குறிப்பாக ஜூன் 21ஆம் தேதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது வாக்குறுதியில், நீட் நுழைவுத் தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.