தமிழ்நாடு அரசு தடை

 

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டால் பல குடும்பங்கள் பாதிப்படைந்ததை அடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்டரி விற்பனையானது களைக்கட்டியுள்ளது. முன்பெல்லாம் லாட்டரி சீட் விற்பவர்கள் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனை செய்து வந்த நிலையில், தற்பொழுது தனியாக ஆபீஸ் போட்டு ஹைடெக் ஆக, அப்டேட் ஆகி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் போரூரில் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில்,  இந்த முறை தாம்பரம் சேலையூர் பகுதியில் லாட்டரி விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.



 

அலுவலகம் அமைத்து

 

குறிப்பாக தாம்பரம் சேலையூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அலுவலகம் அமைத்து, கூகுள் பே, போன்பே போன்ற சகல வசதிகளோடு, பிரிண்டிங் மிசின் வசதியோடு இங்கு லாட்டரி விற்பனையானது நடைபெறுகிறது. குறிப்பாக லக்கி டிரா என்ற லாட்டரி விற்பனை இங்கு களைக்கட்டுவதாகவும், காலை 11.30 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி, மற்றும் 6 மணி இரவு 7:30 மணி என 5 குலுக்கல் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும், அதனால் எப்பபொழுதுமே கூட்டம் முண்டியடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

எப்படியாவது வென்று விடலாம்

 

நாள் ஒன்றுற்கு 3 முதல் 5 லட்சம் வரை கள்ளாகட்டுவதாகவும்,  குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஒட்டுநர், கொத்தனர் வேலை செய்ய கூடிய நபர்கள், சிறு கடை நடத்தி வருவர்கள் என பலரும் இந்த 3 நம்பர் 4 நம்பர் லாட்டரி சீட்டு வாங்குவதாகவும்  தெரிவிக்கின்றனர். மேலும் பம்பர் பரிசாக 1 லட்சம், 2 ஆம் எண்ணிற்கு 28 ஆயிரம், 3ம் எண்ணிற்கு 1000 ரூபாய் பரிசுகள் அறிவித்துள்ளது. ஆன்லைனில் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும், அதனால் எப்படியாவது வென்று விடலாம் என லக்கி டிக்கெட் விற்பனையில் அதிகளவில் பணத்தை இழப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது. தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோவில்,  லாட்டரி சீட்டுகளை ஆபீஸில் வைத்துக்கொண்டு சிலர் விற்பனை செய்வதும்,  அதை பலர் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.