கணவன்-மனைவி தகராறு சில நேரங்களில் கொலையில் முடிந்துவிடுகிறது. அந்தவகையில் தற்போது சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்திலுள்ள சோமு செட்டி தெருவில் சரவணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், திவ்யபாரதி, தனலட்சுமி மற்றும் சூர்யா ஆகிய 3 பிள்ளைகள் இருந்துள்ளன. சரவணன் ராயபுரம் பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி முத்துலட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக தஞ்சாவூரிலுள்ள சொத்து ஒன்றை விற்று பணத்தை தன்னிடம் தருமாறு கணவர் சரவணன் முத்துலட்சுமியை தாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் நேற்று திடீரென்று மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் முத்துலட்சுமியின் ஆடைகளை நீக்கிவிட்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கணவர் சரவணன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த மனைவி முத்துலட்சுமி கணவரை பனியனை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்பின்னர் அவர் கணவரின் தம்பிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவர் சரவணன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சில் சந்தேகம் அடைந்த சரவணனின் சகோதரர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் முத்துலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். இறுதியில் காவல்துறையினரிடம் அவர் கணவர் சரவணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்