தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே ரவுடிகளின் அட்டகாசம் பெருகியுள்ளது. குறிப்பாக சென்னையில் புறநகர் பகுதிகளாக இருக்கின்ற, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் ஏ கிரேட் மற்றும் பி கிரேட் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இந்த ரவுடிகளின் பிரதான தொழிலாக கஞ்சா விற்பது, பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பது, குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, தொடர்ந்த பல்வேறு விதமான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

சென்னையின் புறநகர் பகுதிகளில் பெரிய அளவு ரவுடிகள் தாதாவாக வலம் வருவதும், அவ்வப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்வது, பிரபல ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை குணா என்ற ரவுடியை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்து இது போன்ற ரவுடிகளை ஒழிக்க வேண்டும் என, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய புறநகர் பகுதிகளை சேர்ந்த ரவுடிகளை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

அந்த வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வரும் ரவுடி சச்சின் என்பவரை காவல் துறையினர் பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து தேடி வந்தனர். ரவுடி சச்சின் சமூக விரோதி செயலில் ஈடுபடுவதற்காக, தயார் நிலையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் ரவுடி சச்சின் மீது ஏற்கனவே பல வழக்குகள் நினைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சோமங்கலம் காவல்துறையினர், ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சச்சினை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது காவல்துறையினருக்கு சச்சின், காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை அருகே எருமையூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் ரவுடி சச்சினை காவல்துறையினர் பிடிக்க வேண்டும் என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்ட பொழுது, பதுங்கி இருந்த சச்சின் எதிர்பாராத விதமாக காவல்துறையினர் சுற்றி வளைத்த பொழுது, காவலர் பாஸ்கரன் என்பவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.



 

இதனால் செய்வது அறியாமல் இருந்த காவல்துறையினர் உடனடியாக சச்சினை சரணடையும் படி உத்தரவிட்டுள்ளனர். இதைக் கேட்காமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட சச்சின் முயற்சித்த பொழுது, சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் சச்சினை காலில் இரண்டு தடவை சுட்டுள்ளார். இதனை தொடர்ந்து சச்சின் தப்பி ஓட முடியாமல் இருந்த காரணத்தினால் சுற்றி வளைத்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து உடனடியாக சச்சினை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சச்சினை  நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். ரவுடி ஒருவர் காவலரை வெட்டிய காரணத்தினால், துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.