உலகப் பணக்காரர்களின் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டில் கவுதம் அதானி மீண்டும் அவர் முன்னம் இருந்த மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளார். இதை அடுத்து கோடிகளுக்கு அதிபதியான அதானி இப்போது டெஸ்லா தலைவர் எலான்ன் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்குப் பின்னால் இருக்கிறார். திங்களன்று உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக தரவரிசையில் சரிவு ஏற்பட்டது, இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களுக்குள் இருந்த நிலையில் அதிலிருந்து வெளியேற வழிவகுத்தது. நேற்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியின் மத்தியில் கௌதம் அதானியின் நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தது. பங்கு விலை சரிவு காரணமாக அதானியின் நிகர மதிப்பு 6.91 பில்லியன் டாலர்கள் குறைந்து 135 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கிடையில், பெசோஸின் சொத்து மதிப்பு 138 பில்லியன் டாலராக அதிகரித்ததால், அவர் அதானியை முந்தினார்.




முன்னதாக ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹரூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி முதல் இடத்தைப் பிடித்தார். 


பெரும் பணக்காரர்கள் பட்டியல்


இந்தியாவில் நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹரூன் இந்தியா நிறுவனம் முன்னதாக வெளியிட்டது.


அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.  முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரராகவும் உருவெடுத்தார் அதானி.


இந்நிலையில், இந்த சாதனையை நிகழ்த்த கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளிவந்தன.


கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக தற்போது உள்ளது.


தற்போது உலகின் 2ஆவது பெரும் பணக்காரராக விளங்கும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 2 மடங்குக்கும் மேல் அதிகமாகியுள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில், விமான நிலையங்கள், சிமென்ட், காப்பர் சுத்திகரிப்பு, தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன், பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு, சாலைகள் மற்றும் சூரிய மின்கல உற்பத்தி உள்ளிட்ட புதிய வளர்ச்சித் துறைகளில் அதானி எண்டர்பிரைசஸ் அதிக முதலீடு செய்துள்ளது.


அதானி குழுமம், தொலைத்தொடர்பு துறையில் தடத்தை பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் விமான நிலைய வணிகங்களை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டங்களையும் கொண்டுள்ளது. அதானி குழுமம் பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பிற்காக 70 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி, 2022ல் மட்டும் தனது சொத்தை 60 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளார். மற்ற பணக்காரர்களை விட ஐந்து மடங்கு அதிகம். பிப்ரவரியில் அம்பானியை முந்திச் சென்று, ஏப்ரலில் செண்டிபில்லியனர் (நிகர சொத்து $100 பில்லியன் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்) ஆக உருவெடுத்தார்.