இந்த ஆண்டு, மைசூர் தசரா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி நிறைவடைகிறது. மைசூரில், சாமுண்டேஸ்வரி தேவியால் மகிஷாசுரன் என்ற அரக்கன் வதம் செய்யப்பட்டதை நினைவூட்டும் தசரா பண்டிகையானது , கெட்டதை அழித்து நன்மையை நிலை நாட்டைச் செய்ததை குறிக்கிறது.
தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர், சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புகழ்பெற்ற அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள்.
ஒரு லட்சம் அலங்கார விளக்குகளால் மைசூர் அரண்மனை அலங்கரிக்கப்பட்டு தசரா நாளில் ஒளிவெள்ளத்தில் மூழ்கி இருக்கும். மத அடிப்படையிலான பாரம்பரியங்களை கடந்து, இந்த விழா மாநிலத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.
அதிலும் உலகப் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றான மைசூர் தசராவின் இறுதி நாளன்று ,தசராவின் முக்கிய நிகழ்வான யானைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. ஜம்போ சவாரி என்ற இந்த யானைகள் ஊர்வலம், மைசூர் அரண்மனையில் இருந்து 5கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்டபம் வரை நடைபெற உள்ளது.
மைசூர் தசரா என்பது 14 -17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த விஜயநகர பேரரசர்களின் பாரம்பரியமாக கருதப்படுகிறது. இந்த விழாவின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது தொடங்குவதாக கூறப்படுகிறது.
இன்று வழக்கத்தில் உள்ள பாரம்பரியம் மைசூருவின் உடையார்களால் தொடங்கப்பட்டது என வரலாற்று ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. 1610 இல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அரியணை ஏறிய ராஜா வாடியார், நவராத்திரியை பெரிய அளவில் கொண்டாட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷாசூரனை, சம்ஹாரம் செய்த இடமே , மஹிஷா மண்டலம், மகிஷாபுரம், மஹிஷுர் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு காலப்போக்கில் மைசூர் என மருவியதாக வரலாற்று நூல்களில் அறிய முடிகிறது.
மகிஷ வதம் நடைபெற்ற இந்த ஊரிலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தசரா விழாவை காண உலகெங்கும் உள்ள மக்கள் இங்கு வந்து கூடுவார்கள் . 1902 முதல் 1940 வரை ஆட்சி செய்த நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் காலத்தில்தான் மைசூர் தசரா பிரம்மாண்டம் முறையில் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் நாடா ஹப்பா என்ற பெயரில் கொண்டாடப்படும் நவராத்திரி, தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. மைசூர் நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளின் யானையின் மீது ஊர்வலங்கள் நடக்கும். விழாக் கோலம் பூண்டுள்ள இந்த 10 நாட்களும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நிகழ்வாகும்.
தசரா விழா கொண்டாடப்படும் இந்த 10 நாட்களும் 290 வகையான கலாச்சார நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இறுதி நாளான , அக்டோபர் 5 ஆம் தேதி, தங்க ஹவுடாவை சுமந்து செல்லும் யானைகளின் சவாரி, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான ஒளிவிளக்கு அணிவகுப்பு நடைபெறும்.
விஜயதசமி தினத்தன்று ஜம்போ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானையில் 750 கிலோ எடை கொண்ட தங்கத்திலான சாமுண்டீஸ்வரி அம்மன் பவனி வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.
அதன்பிறகு தீப ஒளி அணி வகுப்பு, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ,நாட்டுப்புற கலை நிகழ்வுகள்
,வாணவேடிக்கை போன்றவற்றால் மைசூர் நகரமே தேவலோகம் போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது
கி.பி 1399-ம் ஆண்டிலிருந்து யது ராஜ மன்னர்கள் எனப்படும் உடையார் வம்ச அரசர்கள் புகழ்பெற்ற விஜய நகர அரசின் பிரிதிநிதியாக இருந்து , மைசூர் கோட்டையை புனரமைத்து தலைமையகமாக மாற்றியதாக கூறப்படுகிறது . மைசூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில், 3486 அடி உயரத்தில் ,சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.
16 கரங்களுடன் பயங்கரியாக மாறி மகிஷனை போருக்கு அழைத்து வதம் செய்த சாமுண்டீஸ்வரியின், சாந்தமான அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார். இன்றும் அமர்ந்த கோலத்தில் இந்த அன்னை அருளாசி வழங்கி வருகிறாள்.
தசரா விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சாமுண்டீஸ்வரியின் பிரம்மாண்ட ஊர்வலம் பண்ணிமண்டபத்தில் நிறைவு பெறுகிறது. அன்றைய நாளில் புராணப் புகழ்பெற்ற ஒரு வன்னி மரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த ஒரு வன்னி மரத்தில்தான் பஞ்ச பாண்டவர்கள், தங்களது அஞ்ஞாத வாசத்தின்போது ஆயுதங்களை மறைத்து வைத்து இருந்தார்களாம். அவர்களுக்கு சாமுண்டீஸ்வரி தேவிதான் காட்சி தந்து அருள் செய்தாள் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தசரா விழாவின 10 நாட்களில் மட்டுமே, மைசூர் அரண்மனையின் தர்பார் ஹாலில் உள்ள தங்க சிம்மாசனத்தை பார்வையாளர்கள் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.