கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்த சென்னை ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடலூர் மத்திய சிறை ஜெயில் துணை கண்காணிப்பாளரின் வீட்டை கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி தீவைத்து குடும்பத்துடன் கொலை செய்ய கூலிப்படை மூலம் முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் செல்போன் வைத்திருந்ததால் கண்டுபிடித்த சிறை துணை கண்காணிப்பாளர் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் தனசேகரன் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்த வழக்கில் எண்ணூர் தனசேகரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



 

எண்ணூர் தனசேகரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்த எண்ணூர் தனசேகரன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டுவரப்பட்டார்.

 

இந்நிலையில் இன்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் 21 பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறார்.