சென்னையில் அமைந்துள்ள பிரபல அரசு மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருவது வழக்கம். புறநோயாளிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ராஜீவ்காந்தி மருத்துவமனை:


இந்த நிலையில், உள்நோயாளிகள் பிரிவில் பாலாஜி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அங்கு மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறுவது வழக்கம்.


அவ்வாறு பயிற்சி பெற்று வரும் மாணவர்களில் ஒருவரான சூர்யா, நோயாளி பாலாஜியின் உடல்நிலை குறித்து பரிசோதித்து வந்தார். அப்போது, அவரிடம் நோயாளி பாலாஜி தனக்கு ஏற்றப்பட்டு வந்த குளுகோஸ் ஊசியை அகற்றுமாறு கேட்டுள்ளார். அதற்கு பயிற்சி மருத்துவர் சூர்யா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த பாலாஜி மருத்துவர் சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், நோயாளிக்கும் சூர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.


மருத்துவருக்கு கத்திக்குத்து:


இதனால், கடும் கோபத்திற்கு ஆளான நோயாளி பாலாஜி சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அங்கே இருந்த கத்தரிக்கோலை எடுத்து பயிற்சி மருத்துவர் சூர்யா கழுத்தில் குத்தினார். இதனால், சூர்யாவின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. மருத்துவமனை வளாகத்திலே நடந்த இந்த சம்பவத்தில் அங்கே இருந்த சக நோயாளிகளும், மருத்துவர்களும், சக பணியாளர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.


உடனடியாக சூர்யாவை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். கழுத்தில் கத்தரிக்கோல் குத்தியதால் படுகாயமடைந்த சூர்யாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, தகவலறிந்த பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனை வளாகத்தின் முன்பு தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மாணவர்கள் போராட்டம்:


இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் பேரணிராஜன் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு வரும் காலங்களில் உறுதிப்படுத்தப்படும் என்றும், இந்த சம்பவத்திற்கு காரணமான பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றனர். மருத்துவமனையின் உள்ளேயே பயிற்சி மருத்துவர் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: இடி தாக்கியதில் உடல்கருகி தாய் உயிரிழப்பு; மகன் படுகாயம் - மரக்காணத்தில் சோகம்


மேலும் படிக்க: Actor Sakthivel: ஹெல்மெட் போடலைன்னா ஃபைன்.. ஆனால் சாலை...? - பிரபல சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!