சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது புஷ்பா நகர். இங்கு வசித்து வருபவர் குமார் என்ற குள்ள குமார். இவருக்கு வயது 21. குமார் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது சகோதரர் தாமோதரன்.


தாமோதரன் சொந்தமாக தொழில் செய்ய நினைத்ததால், ஆட்டோ வாங்கி ஓட்ட நினைத்தார். இதற்காக தனசேகர் ( வயது 26) என்பவர் தாமோதரனுக்கு தவணை முறையில் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். ஆட்டோ வாங்கிய சில மாதங்களுக்கு தாமோதரன் முறையாக தவணைப் பணத்தை செலுத்தி வந்துள்ளார். ஆனால், அதன்பின்பு கடந்த சில மாதங்களாக தாமோதரன் தவணைப் பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.




இதுதொடர்பாக, தாமோதரனுக்கும், தனசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாமோதரன் தனது சகோதரர் குமாரிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் புஷ்பா நகரில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது தனது சகோதரரை மிரட்டிய தனசேகரை குமார் கத்தியால் குத்தினார்.


இந்த கத்திக்குத்து சம்பவத்தில் தனசேகர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இந்த குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்த குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், குமார் நேற்று புஷ்பா நகரில் உள்ள டேங்க்பங்க் சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கே ஆட்டோ ஒன்றில் தனசேகர் மற்றும் அவரது 2 நண்பர்கள் வந்தனர். அவர்கள் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குமாரும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாய்த்தகராறு முற்றவே தனசேகரும், அவரது நண்பர்களும் ஏற்கனவே தாங்கள் தயாராக வைத்திருந்த கத்தியால் குமாரை சரமாரியாக குத்தினர்.




குமாரை கத்தியால் சரமாரியாக குத்திய பிறகு, தனசேகரும் அவரது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தால் குமார் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், குமாரை கத்தியால் குத்திய தனசேகர் மற்றும் அவரது நண்பர்களான புஷ்பா நகரைச் சேர்ந்த ராஜா (வயது 33), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் படிக்க : Watch video: மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை; கையால் பெயர்த்து எடுக்கும் அதிர்ச்சி வீடியோ


மேலும் படிக்க : Crime: வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியர் வெட்டி படுகொலை - ஏராளமான போலீசார் குவிப்பு