வேளாங்கண்ணியில் முன் விரோதம் காரணமாக பிரபல பைனான்சியர் வெட்டி படுகொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். டிவிஆர் மனோகர் என்று அழைக்கப்படும் இவர் அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும் ஒரு சிலருக்கும் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

 

 இந்நிலையில் இன்று வழக்கம் போல் டிவிஆர் மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர்  கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த டிவி ஆர் மனோகரை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மணிவேல் அப்போது தடுக்க முயன்றுள்ளார். சம்பவத்தில் மர்ம நபர்கள் அவரது கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.  டிவிஆர் மனோகர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 



 

இந்த படுகொலை சம்பவம் அறிந்து அங்கு வந்த நாகை எஸ்பி ஜவகர், நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் பைனான்சியரை படுகொலை செய்து விட்டு தப்பி சென்ற குற்றவாளிகள் குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடைய படுகொலை செய்யப்பட்ட பைனான்சியர் டிவிஆர் மனோகரின் உடல் நாகை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிவேல் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

பைனான்சியரை படுகொலை செய்தவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் தெற்கு பொய்கைநல்லூர் கிராம மக்கள் நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த நாகை ASP சுகுமார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 



 

வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளால் பரபரப்பும் நிலவி வருகிறது.