போதைப்பொருள் கலந்த ஐஸ் விற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகனை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
சென்னையில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா, குட்கா போன்ற பல போதை வஸ்துகள் இளைஞரை சீரழித்து வருகின்றன. பல குற்றச்சம்பவங்களுக்கும் இந்த போதை காரணமாகிறது. இந்நிலையில் போதைப்பொருள் கலந்த ஐஸ் விற்ற கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மகனும் ஒருவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதை ஐஸ்..
வட சென்னை பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்கப்படுவது தொடர்ந்து வருகிறது. போலீசார் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது போதைப்பொருள் கலந்த ஐஸ் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சந்தேகம் வராது என்பதால் போதைக்கும்பல் இந்த ஐடியாவை கையில் எடுத்துள்ளதாக கூறப்பட்டது. கிடைத்த சில தகவலின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (26), ராயபுரம் காதர் மொய்தீன் (28), தண்டையார்பேட்டை நாகூர் அனிபா (39), பெரம்பூர் ஷேக் முகம்மது (53) ஆகிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வீட்டில் போதைப்பொருள் ஐஸ் தயாரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிக்காமல் இருக்க ஐடியா..
கைது செய்த 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை செய்ய வேண்டும், அதேவேளையில் போலீசாரிடமும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதால் போதை ஐஸ் ஐடியாவை கையில் எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் போதை ஐஸ் தயாரித்து அதனை வடசென்னையின் பல பகுதிகளிலும் விற்பனை செய்து வந்துள்ளனர். போதை ஐஸ் கும்பலிடம் இருந்து போதைபொருள், ஐஸ் செய்யும் மெஷின் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரான சரவணன் போலீஸின் மகன் ஆவார். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரின் மகனே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது காவல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம் சம்பவம்..
சென்னையில் போதைப்பொருள் குற்றச்சம்பவங்கள் தினம்தோறும் அரங்கேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி போதைக்கு அடிமையாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த குற்றச்சம்பவத்துக்கு உடந்தையாக 3 கல்லூரி மாணவிகள் இருந்ததும், அவர்களும் போதைக்கு அடிமையானவர்களும் என்பதும் சென்னையில் எந்த அளவுக்கு போதை ஊடுறுவுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்