சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஆஷிஸ் பன்சால். இவருக்கு பேட்டரிகளுக்கான அலுமினிய லெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்பதூரில் உள்ளன. ஒட்டு மொத்த தொழிற்சாலைகளுக்கான தலைமை அலுவலகம், சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் நான்காவது மாடியில், ‛பாண்டி ஆக்ஸைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிட்.,’ என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 10 ம் தேதி, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆஷிஸ் பன்சால் அளித்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் படலம் தொடங்கியது. சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் 50 வயதை கடந்த ஒரு நபர், பையுடன் அங்கிருந்து புறப்படுவதும், சாலையில் ஆட்டோ ஒன்றை பிடித்து அங்கிருந்து புறப்பட்டதும் தெரியவந்தது.
அந்த ஆட்டோ சென்ற சாலை வழி முழுவதிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீசார், இறுதியில் திருவல்லிக்கேணியில் அந்த ஆட்டோ சென்றது தெரியவந்தது. இறுதியில் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அந்த நபர் தங்கியிருந்தது தெரியவந்தது. விடுதி நிர்வாகத்திடம் விசாரித்ததில் அன்று முதல் நாள் இரவு தான், அந்த நபர் அங்கிருந்து காலி செய்தது தெரியவந்தது. அதன் பின் சம்மந்தப்பட்ட நபர் விடுதி நிர்வாகத்திற்கு வழங்கிய மொபைல் போன் எண்ணை பெற்ற போலீசார், அந்த நெட்வொர்க் மூலம் சிக்னலை ஆராய்ந்தனர்.
தியாகராயர் நகரில் உள்ள பிரபல சொகுசு ஓட்டல் அமைந்திருக்கும் பகுதியில் அவரது மொபைல் போன் சிக்னல் இருப்பது தெரியவந்தது. அப்போது இரவு நேரம் என்றாலும், போலீசார் உடனே அங்கு விரைந்தனர். சம்மந்தப்பட்ட விடுதியின் உள்ள விருந்தினர் பட்டியலை சரிபார்த்த போது, சம்மந்தப்பட்ட நபர் உள்ளே இருப்பது உறுதி செய்யப்பட்டது. நள்ளிரவாக இருந்ததால், அந்த நேரத்தில் அவரை கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்த விரும்பாத போலீசார், சம்மந்தப்பட்ட நபர் தங்கியிருந்த அறைக்கு அருகில் மற்றொரு அறையில் தங்கினர். காலை விடிந்ததும், சம்மநத்பட்ட நபர் தங்கியிருந்த தளத்தின் மின்சாரத்தை துண்டித்த போலீசார், ஓட்டல் ஊழியரிடம் காபி கொடுத்து அனுப்பினர்.
ஓட்டல் ஊழியர் வெளியிலிருந்து அழைக்க, உள்ளே இருந்து அழைப்பது ஊழியர் தான் என்பதை உறுதி செய்த அந்த நபர், கதவை திறந்ததும், மறைந்திருந்த உதவிஆணையர் தலைமையிலான போலீசார், சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும் அவரது அறை லாக்கரில் இருந்து 61 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், சம்மந்தப்பட்ட நபர் நெல்லை மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும், 57 வயதான் இவர், முன்னாள் ‛திருடர்’ என்பதும், 1981ல் சென்னை எழும்பூரில் இவர் மீது 16 வழக்குகள் இருந்ததும், கோவை மாவட்டத்திலும் சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் திருட்டு தொழிலை விட்டுவிட்டு ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்த பாண்டுரங்கனுக்கு இடையில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் கடனாளியாக மாறிய அவர், அதிலிருந்து மீண்டு வர இறுதியாக ஒரு திருட்டை செய்து செட்டில் ஆகலாம் என்ற நினைத்திருக்கிறார். இதற்காக சென்னை வந்த அவர், விடுதியில் தங்கி சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் கொள்ளையடித்ததும், பணத்துடன் ஊர் திரும்ப தயாராகும் முன், தனது அடையாளத்தை மறைப்பதற்காக ரூ.1 லட்சம் செலவு செய்து பேஷியல் செய்ததும் தெரியவந்தது. பேஷியல் உள்ளிட்ட சில ஆடம்பர செலவுகளை செய்த வகையில் கொள்ளையடித்த பணத்திலிருந்து 11 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததும் தெரியவந்தது.
மாஜி திருடர்... நீண்ட இடைவெளிக்குப் பின் ‛அப்டேட்’ இல்லாமல் களத்தில் இறங்கியதும், திருடிய இடத்திலிருந்த வீடு வரை மிளகாய் பொடி தூவி வரும் வடிவேலு போல, சிசிடிவி கேமராக்கள் தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை பின்தொடர்ந்து வந்து காட்டிக்கொடுத்ததை அறியாமல் அகப்பட்டு, தற்போது சிறையில் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்