திருச்சி ஸ்ரீரங்கம் ரங்க கோபுரம் அருகே உள்ளது ஸ்ரீ வெங்கடேச பவன். இது மதிய நேரத்தில் இயங்கும் டிபன் கடை இந்த கடையில் தினமும் டிபன் அயிட்டங்களோடு ஒரு ஸ்பெஷல் உள்ளது. மறைந்த அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை அனைவருமே இந்த கடையின் கஸ்டமர்கள் என்று கூறுகிறார்கள் கடையின் உரிமையாளர்கள். இந்த கடை குறிப்பாக மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே தினமும் இயங்குகிறது மேலும் இங்கு அசத்தலான டிபன் அயிட்டங்கள் கிடைக்கும். தோசை, ரவா பொங்கல், பூரி,இட்லி, சாம்பார் வடை, தயிர் வடை தவிர ஸ்பெஷலாக இடியாப்ப சேவை, ஜீரா போளி, கிச்சடி, பாம்பே காஜா, அக்கார அடிசில், கோதுமை அல்வா, கேசரி, பன் அல்வா என தினமும் ஒரு ஸ்பெஷல் என்று தயார் செய்து அசத்துகின்றனர்.  பொதுவாக நாம் எந்த உணவகத்திற்கு சென்றாலும் முதலில் நமக்கு ஆசுவாசத்தை தரக்கூடியது அவர்களின் உபசரிப்பு தான். இங்கு அதற்கு பஞ்சமே இல்லை. 80 வயதிற்கு மேற்பட்ட இரண்டு பேர், அவர்களின் அண்ணன் மகன் ஒருவர், ஆகியோர் தான் இந்த வெங்கடேச பவனை நடத்திவருகின்றனர். காலையில் மட்டுமே கிடைக்கும் என நினைக்கும் டிபன்கள் ரவா பொங்கல், தோசை, பூரி, இட்லி போன்ற எல்லாமே மதிய நேரத்திலும் இங்கு கிடைக்கின்றது. அதேபோன்று ருசியும் வேற லெவல் ஆத உள்ளது. மதியத்தில் டிபன் சாப்பிட வேண்டும் என்று யோசிப்பவர்கள் இங்கு வந்தால் நிச்சயமாக சாப்பிடலாம். அத்தனை சுவையாக இருக்கின்றது.




இதனைப்பற்றி கடை உரிமையாளர்களில் ஒருவரை கேட்டபோது 1948இல் இந்த ஹோட்டலை தொடங்கியதாகவும் அப்பொழுதெல்லாம் ஐந்து மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரைக்கும் இயங்கும் என்று தெரிவித்தார். பின்னர் 1980 ல் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரையிலும் மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரையிலும் இயங்க தொடங்கியதாக அவர் தெரிவித்தார். மாலை நேரத்தில் பலகாரம், ஸ்வீட் போன்றவை செய்து விற்பனை செய்ய தொடங்கினோம். தற்போது மூன்றாவது தலைமுறையாக இதை நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் தங்களது தாத்தாவின் பெயர் நினைவாக இந்த கடைக்கு வெங்கடேச பவன் என்று பெயர் வைத்ததாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த கடையில் எந்த வேலையாட்களும் வைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவ்வாறு வேலையாட்கள் வைக்கும்போது உபசரிப்பு என்பது குறையக்கூடும்.




அதன் காரணமாக இதனை நடத்திக் கொண்டும் இங்கு இருக்கும் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதன் காரணமாகவே 3 மணி நேரம் மட்டும் இயங்குவது போன்று நேரத்தை மாற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். மேலும் சோலார் இல் இருந்து கடைக்குத் தேவையான மின்சாரம் கிடைப்பதனால் மின்சார கட்டணம் கட்ட வேண்டியது தேவை இல்லை. திங்கட்கிழமை 'இடியாப்ப சேவை', செவ்வாய்க்கிழமை 'ஜீரா போளி',  புதன்கிழமை 'கிச்சடி', வியாழக்கிழமை 'பாம்பே காஜா', அல்லது 'அக்கார அடிசில்', வெள்ளிக்கிழமை 'கோதுமை அல்வா', சனிக்கிழமை 'கேசரி', ஞாயிற்றுக்கிழமை 'பன் அல்வா' என தினமும் ஒன்று ஸ்பெஷலாக செய்து விடுவோம். இதன் சுவை காரணமாகவே இந்த உணவுகளை சாப்பிடுபவர்கள் தொடர் வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள்.




இந்த கடையில் கிடைக்கும் சாம்பார் வடை, தயிர் வடை பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். குறிப்பாக மறைந்த அரசியல் கட்சித் தலைவர்களான ராஜாஜி, ராஜேந்திரபிரசாத், கக்கன் போன்றவர்கள் ஸ்ரீரங்கம் வந்தால் இந்த கடையில் சாப்பிடாமல் போக மாட்டார்கள் என்று தனது தாத்தா மற்றும் அப்பா சொல்லி கேட்டு இருப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.தினமும் 200 பேர் வரை இந்த கடையில் சாப்பிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ரெகுலர் வாடிக்கையாளர்கள் என்று கூறி பெருமை கொள்கிறார் கடையின் உரிமையாளர். தொடர்ந்து கடையின் வாடிக்கையாளர். களிடம் பேசியபோது, தான் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்த கடையில் சாப்பிட்டு இருக்கிறேன் என்றும் வீட்டு சாப்பாடு போன்று தான் இங்கு இருக்கும். மேலும் இங்கு மிக சுத்தமாகவும், விலையும் நமக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக வெள்ளிக்கிழமை கிடைக்கும் கோதுமை அல்வாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவர் தெரிவித்தார். இவர்களிடம் மிகப் பிடித்தது இவர்களின் உபசரிப்பு தான் என்று வாடிக்கையாளர் கூறுகிறார். மேலும் இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் இல்லை என்றும் வாடிக்கையாளர் தெரிவித்தார்.எவ்வளவு உணவகங்கள் வந்தாலும், இது போன்ற நீண்டகாலம் இயங்கும் பழங்கால உணவகம் அதுவும் மாலை நேரத்தில் டிபன் கிடைக்கும் இந்த வெங்கடேச பவனுக்கு என்றுமே மவுசு குறையாது. எனவே, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வருபவர்கள் நிச்சயம் இந்த வெங்கடேச பவனையும் மிஸ் செய்து விடாதீர்கள்.