பலவருடங்களாக தொடர் பைக் திருட்டு - பெட்ரோல் இல்லா பைக்கை திருடி தள்ளிச் சென்ற போது மாட்டி கொண்ட திருடர்கள் 2 பேர் கைது - 15 வாகனங்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் பைக்குகள் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 15 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி மோட்டார் பைக்குகள் திருடு போனது இது குறித்து காவல்துறையினருக்கு புகார் சென்றது ஆனாலும் மோட்டார் பைக்குகள் திருட்டு நடந்து கொண்டே இருந்ததுஇதையடுத்து காரைக்குடி குற்றப்பிரிவு காவல்துறையினர் திருட்டு கும்பலை தேடி வந்தனர். இரவு ரோந்து பணியில் இருக்கும் போது இரண்டு பேர் பைக் ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தனர். அவர்களை விசாரனை செய்த போது முன்னுக்கு பின் பதில் கூறியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து உரிய முறையில் விசாரனை செய்தபோது, பைக்கை திருடிட்டு வரும் போது திருடிய பைக்கில் பெட்ரோல் இல்லாததால் தள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரனையில் இவர்கள் இருவரும் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், பாலமுருகன் என்றும் 40 க்கும் மேற்பட்ட மோட்டர் பைக்குகளை கடந்த 3 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 15 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்ற வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பைக் திருடினாலும் இவர்களுக்கு என்று ஒரு கொள்ளை இருந்துள்ளது. அதாவது ஒரு பைக்கை திருடி அதில் கிடைக்கும் பணத்தை தாராளமாக செலவு செய்வார்கள். அந்த பணத்திலிருந்து கடைசி ஒரு ரூபாய் தீரும் வரை அவர்கள் அடுத்த திருட்டிற்கு செல்வதில்லை. பணம் காலியான மறுநொடியே அடுத்த பைக் திருட கிளம்பிவிடுவார்களாம். இதுவரை இவர்களது திருட்டுகள் தடையின்றி நடந்து வந்துள்ளது. அதற்கு காரணம்... அவர்கள் திருடிய பைக்குகளில் பெட்ரோல் சரியான அளவு இருந்துள்ளது. கடைசியாக திருடி சிக்க காரணம், அந்த வண்டியில் பெட்ரோல் இல்லாமல் போனதும், அதை உருட்டும் போது சிக்கி நேர்ந்ததும். பெட்ரோல் விக்கிற விலையில், யாரு டேங்க் பில் பண்ணி நிறுத்துவது. அரைகுறையா தான் பெட்ரோல் போடுறாங்க. அதன் விளைவு ஒரு பலே பைக் திருட்டு ஜோடி சிக்கியுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம் அன்றாடம் பயன்படுத்தும் பொதுமக்களை மட்டுமல்ல... திருட்டு கும்பலை பாதித்திருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.