வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் பிரச்சினை ஏற்பட்டதால் சைவ பிரியரான பிளஸ் ஒன் படிக்கும் அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  



சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு. குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ்(வயது 16), கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.


 


நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணி


தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார். இதனால் வீட்டில் அசைவ உணவு செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையின் போது தாரிசின் தம்பி கோகுல் அருகில் நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். இதில் அண்ணன் தம்பியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று வீட்டில் தனி அறையில் வெளியில் வராமல் தாரிஸ்  இருந்துள்ளார்.


சோக சம்பவம் 


இரவில் வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால் உள்ளே பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் தாரிஸ். உடனடியாக அவரை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் மாணவன் தாரிசின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த தாம்பரம் போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில்  பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


 


 


Suicidal Trigger Warning..


 



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)