12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் மாற்றம் கொண்ட மாணவர்களின் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
கடந்த மே 6ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
எனினும் இதில் மதிப்பெண்களில் திருத்தம் தேவைப்பட்ட மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
மறு கூட்டல் (Re-total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள Notification பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1718702033.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, இந்த விவரங்களை அறியலாம்.
இடம்பெறாத பதிவெண்களுக்கு என்ன அர்த்தம்?
மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தும் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1718702033.pdf என்ற இணைப்பில் உள்ள பட்டியலில் சில மாணவர்களின் பதிவெண்கள் இடம்பெற்று இருக்காது. அந்த பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மதிப்பெண் பட்டியலைப் பெற முடியும்.
முடிவுகளை அறிவது எப்படி?
* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* அதை க்ளிக் செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது ?
அதே நேரத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஹால் டிக்கெட்
இதற்கிடையே பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், இன்று (ஜூன் 19) பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in