செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை வளர்ப்பு என்பது மிக கடினமான ஒன்றாகவே உள்ளது. நாம் தெரியாமல் செய்யும் சிறு தவறு கூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும், அவர்களுக்கு தெரியாமல் செய்யும் சிறு தவறு குழந்தைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, தாய் செய்த சிறிய தவறால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌ இந்தநிலையில் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 





மகன் இறந்ததால் மன உளைச்சல்



சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் சந்தோஷபுரத்தில் தனது தாய் சுதாவுடன் வசித்து வருபவர் அஸ்வினி (31). இவர் சிறுசேரியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது கணவர் கணவர் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். 


இந்நிலையில் இவர்களது மூத்த மகன் ஹிரிதிவ் (7) உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவர்கள் பரிந்துரையில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளார். 


குழந்தை வாயில் நுரை


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கையின் பக்கத்தில் மாத்திரைகளை வைத்து விட்டு அஸ்வினி கழிவறை சென்று விட்டு வந்ததாகவும், அப்போது எல்கேஜி படிக்கும் மகள் ஹார்த்ரா (4), தூக்க மாத்திரையை தவறுதலாக எடுத்து சாப்பிட்டதாகவும் பின்னர் இருவரும் தூங்கியதாகவும் கூறப்படுகிறது.


பின்னர் நேற்று காலை 4 மணியளவில் அஸ்வினி எழுந்து பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளி இருந்துள்ளது.


தாய் தற்கொலை முயற்சி


மகள் இறந்து விட்ட சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அஸ்வினி கழிவறைக்கு சென்று, பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


வழக்கம்போல காலை குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்ய பாட்டி சுதா வந்த போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அஸ்வினியும், குழந்தை துரை தள்ளியும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 


போலீசார் வழக்கு பதிவு



பின்னர் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற சேலையூர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதால் போலீசார் சந்தேகத்தின் மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உஷாராக இருங்கள் மக்களே..


குழந்தைகள் எப்பொழுதும் சுட்டித்தனமாகவே இருப்பார்கள். புதியதாக எந்த பொருளைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஆர்வம் வந்துவிடும். அந்த பொருளை பரிசோதித்துப் பார்ப்பதற்கும், வாயில் எடுத்து வைத்துக் கொள்வது, குழந்தைகளின் இயல்பு. சார்ஜர் ஒயர்களை குழந்தைகள் கடிப்பதும் இதன் காரணமாகத்தான். எனவே குழந்தை வளர்ப்பவர்கள் குழந்தைக்கு எட்டும் வகையில் எந்த ஆபத்தான பொருட்களையும் வைக்கக்கூடாது. குறிப்பாக மாத்திரை போன்ற பொருட்கள் குழந்தை கண்ணில் பார்க்கக்கூடாது, இன்றைய காலத்தில் மாத்திரையும் மிட்டாய் போன்று இருப்பதால், குழந்தைகளுக்கு அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு, எனவே பெற்றோர் இதுபோன்ற விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.