கோவை மாநகராட்சி மேயர் பதவிக்காக தேர்தல் இன்று நடைபெற்றது. முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது, திமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மண்டல வாரியாக கவுன்சிலர்களின் வருகை கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள 96 கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்ட அரங்கில் சக கவுன்சிலர்களுடன் கலந்து கொண்டுள்ள மத்திய மண்டல தலைவர் மீனாலோகு இரண்டாவது நாளாக கண்ணீருடன் பங்கேற்றார்.


வாக்குவாதம் செய்த கவுன்சிலர்


திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து அமைச்சர்கள் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் அறிவுறுத்தல்களை வழங்கினர். திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களுடன் அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் நேரு, இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் கட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ராஜினாமா செய்த முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, “மேயர் வேட்பாளர் 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். பிறகு உங்கள் முன்னிலையில் மேயர் நாற்காலியில் அவரை அமர வைக்கின்றோம். கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். சில பேருக்கு சங்கடங்கள் இருக்கின்றது, அதை நான் தீர்த்து வைப்பேன்.




சமாதானப்படுத்திய அமைச்சர்


தலைமை கழகம் அறிவித்துள்ள வேட்பாளரை வெற்றி வைக்க வேண்டும். அப்போது 63 வார்டு கவுன்சிலரும், பணிகள் குழு தலைவருமான சாந்தி்முருகன், நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் ஒதுக்குகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். அவரை பேச விடாமல், ”உட்காருங்கம்மா” என அமைச்சர் நேரு அமர வைத்ததுடன், உங்கள் ஆதங்கங்களை நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் எனத் தெரிவித்தார். மீண்டும் அமைச்சர்களிடம் ஆவேசமாக பேசிய கவுன்சிலர் சாந்தி முருகனை, மத்திய மண்டல குழு தலைவர் மீனாட்சி சமரசப்படுத்தினார். இருந்தாலும் ஆதங்கத்தை அடக்க முடியாமல் தனது அதிருப்தியை சாந்தி முருகன் வெளிப்படுத்தினர். அவரை அவரது கணவர் முருகன் மற்றும் சக கவுன்சிலர்கள் சமரசப்படுத்தினா். இருந்தாலும் நீண்ட காலமாக கட்சிக்க உழைத்த குடும்பத்தினரை ஒதுக்கி விட்டதாக கண்ணீருடன் கூட்ட அரங்கில் இருந்து சக கவுன்சிலர்களுடன் வெளியேறினார். அமைச்சர்கள் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் மேயர் தேர்விற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து, கண்ணீரோடு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதையடுத்து கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. அப்போது திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரங்கநாயகி மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் அவரை எதிர்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ரங்கநாயகி கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் ஏழாவது மேயர், இரண்டாவது பெண் மேயர், திமுகவின் இரண்டாவது மேயர் ஆகிய சிறப்புகளுடன் ரங்கநாயகி, கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற மீனா லோகு, சாந்தி முருகன் ஆகியோர் வாய்ப்பு கிடைக்காததால் சோகத்துடன் காணப்பட்டனர்.