மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்ற அதிமுக மாநாட்டில் நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி எந்தவொரு முக்கிய கருத்தையும் தெரிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பிரமாண்ட மாநாடு:


ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்து 60 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைத்து, அதிமுகவின் மாநாடு மதுரையில் நடந்து முடிந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டால் மதுரையே விழாக்கோலம் பூண்டது. அக்கட்சியின் தலைமையை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கைப்பற்றிய பிறகு, நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியது.  பாஜக உடனான கூட்டணி, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வியூகம் என்பன போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 


எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?


ஆனால், எதிர்பார்த்த அளவிலான ஆவேசமான உரையை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தவில்லை என்பதே உண்மை. நீட் தேர்வு விவகாரம், கச்சத்தீவு பிரச்னை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை, டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவது, எதிர்ப்பு என ஏற்கனவே பலமுறை, பல மேடைகளில் பேசியதையே தான் மீண்டும் பேசினார். அதோடு, அதிமுக வரலாறு மற்றும் தனது ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் பட்டியலிட்டார்.


புஸ்வானமான எதிர்பார்ப்புகள்..!


பாஜக உடனான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இருப்பினும் அதிமுக மீது அண்ணாமலை மட்டுமின்றி பாஜகவின் பல்வேறு இரண்டாம் கட்ட தலைவர்களும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதற்கு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  இருப்பினும் மாநாட்டின் போது பாஜகவிற்கு, ஈபிஎஸ் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அதுகுறித்து எந்தவொரு முக்கிய கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை. இதனால், அதிமுக தொண்டர்களே எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்துள்ளனர். அதோடு, நாடாளுமன்ற தேர்தலின்போது யார் தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும் என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி எந்தவொரு தெளிவான கருத்தையும் கூறவில்லை.


அட்டாக் மோட் என்ன ஆனது?


அதிமுகவை கைப்பற்றுவோம் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் முழங்கி வருகின்றனர். அவர்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கு வாக்கு வங்கி அரசியல் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


ஈபிஎஸ் திட்டம் என்ன?


தென்மாவட்டங்களில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் தான், மதுரையில் இந்த பிரமாண்ட மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். அதேநேரம், தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதால், அவர்களை விமர்சித்து பேசினால் அந்த மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். அப்படி நடந்தால் கோடிகளை கொட்டி இவ்வளவு பிரமாண்டமாக மாநாட்டைநடத்தியதே பயனற்றதாகிவிடும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்று கருதியிருக்கலாம். இதன் காரணமாகவே மதுரை மாநாட்டில் சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் குறித்து, எடப்பாடி பழனிசாமி பெரிதாக பேசவில்லை என கூறப்படுகிறது.