நட்சத்திர ஹோட்டலில் சொகுசு அறை எடுத்து விடிய விடிய மது குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் அரைநிர்வாணத்தில் ஹோட்டலில் உள்ள பொருட்களை சூறையாடிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூகவலைதளங்களில் வைரலான வீடியோவால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஒரு நபர் கடந்த 11ஆம் தேதி சொகுசு அறை எடுத்து இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய உயர்ந்த மதுபானங்களை ஆர்டர் செய்து குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில், அறையை காலி செய்துவிட்டு ஹோட்டலில் இருந்து எஸ்கேப் ஆக முயன்றுள்ளார். இதைப்பார்த்த ஊழியர்கள் அவரிடம் சொகுசு அறைக்கும், மதுபானத்திற்கும் பணம் தருமாறு கேட்டுள்ளனர். உடனே, அந்த நபர் தான் ஒரு வக்கீல் என்றும் தன்னிடமே பணம் கேட்கிறாயா என்று ஊழியர்களிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். போதை தலையின் உச்சிக்கு ஏறியதால், என்ன செய்வதென்று தெரியாது அரை நிர்வாணத்துடன் நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். அவரை ஊழியர்கள் தடுத்து பார்த்தும் அவர் அடங்கவில்லை. உடனே, அருகே இருந்த காவல் நிலையத்தில் ஹோட்டல் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த ஆஸ்டின் என்றும், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஆஸ்டின் இதேபோல் நட்சத்தர ஹோட்டகளில் ரூம் எடுத்து தங்கி மதுபானங்கள் குடித்துவிட்டு வெளியே செல்வார் என்றும், பணம் கேட்டால் தான் வழக்கறிஞர் என்றும் கூறி பொருட்களை உடைத்துவிட்டு செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளாராம். இதனைத்தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர். அவர் செய்த கலவரத்தால் ஹோட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் ரகளையில் ஈடுபட்டு பொருட்களை உடைக்கும் காட்சி, ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவானது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்