சென்னை கோயம்பேட்டில் 31 வயதுடைய இளம்பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இரவு நேரத்தில் அவர் ஆட்டோ ஓட்டச் செல்வதால் இந்த பெண் வீட்டில் பிள்ளைகளுடன் தனியாக இருப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வெக்கையின் காரணமாக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியுள்ளார்.
அப்போது அப்பகுதி வழியாக சென்ற போதை ஆசாமி, திறந்து கிடந்த வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண் கழுத்தில் கத்தி வைத்தி மிரட்டியுள்ளார். சத்தம் போட்டால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பின் கத்திமுனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அந்த நபர் தப்பிக்க முயன்ற போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் திரண்டு, அந்த நபரை பிடித்து, தர்ம அடி அடித்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கும் போலீசார் விரைந்தனர். பாலியல் வன்கொடுமை செய்த ஜான் பால்ராஜ் (வயது 38) என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.