சென்னையில் சமீபகாலமாக பதின்ம வயதில் இருப்பவர்கள் மற்றும் வாலிபர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்:


சென்னை, கொடுங்கையூரில் அமைந்துள்ளது ஆர்.ஆர்.நகர். இங்கு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி வைப்பதே வழக்கம் ஆகும். இதனால், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட பலவும் சாலையிலே நிறுத்தப்பட்டிருக்கும்.


இந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை 3 வாலிபர்கள் சரமாரியாக அடித்து உடைத்துள்ளனர். இதனால், ஆட்டோக்கள், இருசக்கர வாகனம் உள்பட பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.


9ம் வகுப்பு மாணவன், வாலிபர்கள் அட்டூழியம்:


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மற்றும் 2 வாலிபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் அடிதடியில் ஈடுபட்டு திரிந்து வரும் ஜாக்கி மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவரும், அவர்களுடன் 9ம் வகுப்பு மாணவனும் சேர்ந்து இந்த செயலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.


இதில், விஜய் என்ற ஜாக்கி மற்றும் லாரன்ஸ் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதும், இருவரும் அப்பகுதியில் ரவுடிகளாக உலா வருவதும் தெரியவந்தது. விஜய் மீது கொலை முயற்சி உள்பட 12 வழக்குகளும், லாரன்ஸ் மீது 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து 9ம் வகுப்பு மாணவனுக்கு மது வாங்கி கொடுத்து அவனையும் சேர்த்துக் கொண்டு வாகனங்களை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, 22 வயதான விஜய், 23 வயதான லாரன்ஸ் இருவரையும் கைது செய்தனர். அந்த 9ம் வகுப்பு மாணவனையும் போலீசார் பிடித்தனர்.


முறிந்த கை, கால்கள்:


போலீஸ் இவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது லாரன்ஸ் மற்றும் விக்கி இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனர். இந்த முயற்சியின்போது அவர்களில் லாரன்ஸ் மற்றும் விஜய்க்கு கை மற்றும் கால் முறிந்தது. இதையடுத்து, அவர்களை உடனடியாக பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டனர். பின்னர், அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்களுடன் சேர்ந்து வாகனங்களை நொறுக்கிய 9ம் வகுப்பு சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.


போலீசாரிடம் விஜய்யிடம்  வாகனங்களை தாக்கியது ஏன்? என்று கேட்டபோது தான் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை விரும்புவதாவும், அந்த பெண்ணை தன்னிடம் பேசவிடாமல் அந்த பெண்ணின் பெற்றோர்கள் தடுப்பதாகவும், அதன் காரணமாகவே ஆத்திரத்தில் வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் விஜய் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Crime: பெண் மருத்துவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்! வீடியோ எடுத்து மிரட்டல்!


மேலும் படிக்க: மேலும் படிக்க: ஆசிட் வீசி கொல்லப்பட்ட தங்கை : இளைஞரை கொன்று பழிதீர்த்த சகோதரர்கள்.. நடந்தது என்ன?