சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது கலாஷேத்ரா நடனப்பள்ளி. பிரபல நடனக்கல்லூரியான இந்த கல்லூரியில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலர் கடந்தாண்டு அங்கு பணியாற்றிய பேராசியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் பேராசிரியர்:


இந்த கல்லூரியில் நடன பேராசிரியராக பணியாற்றியவர் ஸ்ரீஜித். இவர் தற்போது அடையாரில் தனியாக நடனப்பள்ளி நடத்தி வருகிறார். கலாஷேத்ரா கல்லூரியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவர் படித்தார். இந்த முன்னாள் மாணவி தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இந்த முன்னாள் மாணவி சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் ஒன்று அளித்தார்.


அந்த புகாரில், தான் கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் படித்தபோது அங்கு நடன பேராசிரியர் ஸ்ரீஜித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.


கைது:


அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெளிநாட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தினர். இதில், அந்த பெண் நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு அவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித்தை போலீசார் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்தாண்டு இதேபோல கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஹரிபத்மன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபகாலமாக இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவது பெரும் வேதனையை மாணவ, மாணவிகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு


மேலும் படிக்க: Crime: பள்ளிக்கரணை: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கணவன்: மனைவி தூக்கிட்டு தற்கொலை